சென்னை:
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சத்தியம் டிவி தரப்பில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது என்று கூறி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் பல்வேறு தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக விஜய் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என்று 4 முனைப்போட்டி உருவாகும் என்று பார்க்கப்படுகிறது. திமுகவைப் பொறுத்தவரைத் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் சத்தியம் டிவி தரப்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக 105 தொகுதிகளில் முன்னிலையும், அதிமுக 90 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளன. மீதமுள்ள 39 தொகுதிகளில் இழுபறி நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விஜய் தலைமையிலான தவெகவுக்கு எந்தவொரு தொகுதியிலும் முன்னிலை கொடுக்கப்படவில்லை. ஆனால் விஜய் குறித்து சத்தியம் டிவி கருத்துக்கணிப்பில் கூறி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. விஜய் யாருடைய வாக்குகளைப் பிரிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவுகள் மாறும் என்பது நிச்சயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியம் டிவியின் சர்வேயின்படி, ஆளும் அரசுக்கு எதிரான வாக்குகளை விஜய் பெரியளவில் பிரிக்க உள்ளார். அதேபோல் விஜய் அதிமுகவுடன் கைகோர்த்தால், பெரிய அளவில் வெல்வது நிச்சயம் என்றும், இரு தலைவர்களின் ஈகோ அதற்கு இடம் கொடுக்காது என்பது திமுகவிற்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் இளம் பெண்களின் ஆதரவு திமுகவுக்கு நிகராக தவெகவுக்கும் இருப்பதாக சத்தியம் டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விஜய் தலைமையிலான தவெக தனித்துப் போட்டியிட்டால் 14 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் 2வது மாநில மாநாடு, சுற்றுப்பயணம் உள்ளிட்டவை தவெகவுக்கு கைக் கொடுத்தாலும், பலமான இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாதது அந்தக் கட்சிக்குப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனை விஜய் எப்படி சரி செய்வார் என்பது தேர்தல் வரும் போதுதான் தெரியும்.