பாட்னா: பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள வால்மீகிநகர் புலிகள் காப்பகத்தில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
இந்தநிலையில் பெட்டியா பிரிவில் உள்ள மகுராகா வனப்பகுதியில் நாள்தோறும் அதிகாரிகள் ரோந்து சென்று, வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்து வரும் நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ரோந்து குழுவால் ஆண் புலியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து நாங்கள் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வால்மீகிநகர் புலிகள் காப்பகத்தின் இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர், மருத்துவர் நேஷமணி மற்றும் கோட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் பிரதியுமான் கெளரவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதனை அடுத்து இறந்த புலியின் உடலை அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தியுள்ளனர்.
சண்டை காரணமாக புலி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி ஒன்று உயிரிழந்திருப்பது வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன உயிர் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

