Last Updated:
வால்பாறையில் வேன் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை 13 வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கேரள வாகனம் விபத்துக்குள்ளானதில் ஓரே பள்ளியில் பணிபுரியும் 7 ஆசிரியைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 13 பேர், வேனில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். வால்பாறை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவர்கள் பொள்ளாச்சி வழியாக கேரளா திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வால்பாறை மலைப்பாதையில் உள்ள 13ஆவது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தடுப்பு சுவரில் மோதி 800 அடி பள்ளத்தில் 9வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 2 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்தில் ஆஷா, ஷகிலா, சஜிதா உள்பட 7 ஆசிரியைகள், மஜித் என்ற பள்ளி ஊழியர் மற்றும் 12 வயது சிறுவன் இறந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடைபெற்ற பகுதியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியாப்பானவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாள் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
வால்பாறை கொண்டை ஊசி வளைவு வாகன விபத்தில் மீட்புப் பணிகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பானவர் தெரிவித்தார். விபத்தையறிந்து பொள்ளாச்சிக்கு விரைந்து வந்த கேரள மின்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார். விபத்துக்குள்ளான வாகனம் 2012 மாடல் என்பதும், பிரேக் பிரச்சினையால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Chennai,Tamil Nadu


