மாஸ்கோ,இந்த மாத தொடக்கத்தில் ரஷிய அரசாங்கம் தனது சொந்த அரசு செய்தியிடல் செயலியை ஊக்குவிப்பதற்காக நாட்டில் தனது சேவையை முழுமையாகத் தடுக்க முயற்சித்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ் அப் செயலி’ யை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் ரஷிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மேக்ஸ்’ என்ற செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அந்நாடு முயற்சி செய்கிறது. தற்போது ரஷியாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை ஒழித்துக்கட்டும் வகையில், அங்கு நாடு முழுவதும் வாட்ஸ்அப்பை தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மற்றொரு முன்னணி செயலியான டெலிகிராம் சேவையிலும் அந்நாட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘ரோஸ்கோம்நாட்சோர்’ கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பிப்ரவரி 2022 இல் மாஸ்கோ உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து ரஷியாவிற்கும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. அப்போதிருந்து, ரஷிய அதிகாரிகள் மேற்கத்திய தளங்களில் அழுத்தத்தை அதிகரித்து, உள்ளூர் சட்டங்களை இன்னும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டனர். இணங்க மறுக்கும் நிறுவனங்கள் கட்டுப்பாடுகள், அபராதங்கள் அல்லது நேரடித் தடைகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு செய்தி தளங்களுக்கு எதிராக ரஷியா நடவடிக்கை எடுத்தது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் சில அழைப்பு அம்சங்களை மட்டுப்படுத்தியது, இந்த நிறுவனங்கள் மோசடி மற்றும் பயங்கரவாத வழக்குகளில் சட்ட அமலாக்கத்துடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. டிசம்பரில், ரஷியா ஆப்பிளின் பேஸ்டைம் சேவையையும் தடை செய்திருந்தது.
இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷிய அரசு தனக்கு சொந்தமான செயலியில் பயனர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், வாட்ஸ் அப் செயலியின் செயல்பாட்டை தடுக்க முயற்சித்தது. 10 கோடி பேருக்கும் மேற்பட்ட பயனர்கள் தகவல் தொடர்புக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ரஷிய பயனர்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
மெட்டா, ரஷியாவின் விதிகளைப் பின்பற்ற முடிவு செய்கிறதா அல்லது அரசாங்கத்தின் கோரிக்கைகளைத் தொடர்ந்து எதிர்க்கிறதா என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.




