ஓசூர்: வெயில் வாட்டி வரும் நிலையில் நுகர்வு அதிகரித்துள்ளதால், ஓசூரில் எலுமிச்சை பழம் மற்றும் வெள்ளரியின் விலை உயர்ந்துள்ளது.
ஓசூரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் நுங்கு. இளநீர், தர்பூசணி மற்றும் பழச்சாறுகளை அதிக அளவில் வாங்கி பருகத் தொடங்கியுள்ளனர். இதேபோல, மருத்துவ குணங்கள் நிறைந்த மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் எலுமிச்சை பழம் மற்றும் வெள்ளரிக் காய்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், இவற்றின் தேவை அதிகரித்துள்ளது. ஓசூர் உழவர் சந்தைக்கு வழக்கமாக தினசரி 1 டன் எலுமிச்சை பழம் விற்பனைக்கு வரும்.
தற்போது, நுகர்வு அதிகரிப்பால், தேவையும் அதிகரித்துள்ள நிலையில் மகசூல் குறைந்துள்ளதால், சந்தைக்குத் தினசரி 500 கிலோ எலுமிச்சை பழம் மட்டுமே வரத்துள்ளது. இதனால், ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையான எலுமிச்சை ரூ.120-க்கு விற்பனையாகிறது. இதேபோல ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அறுவடையாகும் வெள்ளரிக் காய் உழவர் சந்தைக்கு தினசரி 2 டன் வரை விற்பனைக்கு வரும்.
கோடை விற்பனையை மையமாக வைத்து அதிக விவசாயிகள் வெள்ளரி சாகுபடி செய்துள்ள நிலையில், தற்போது, உழவர் சந்தைக்கு தினசரி 5 டன் வரை விற்பனைக்கு வருகிறது. ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையான வெள்ளரிக்காய் நுகர்வு தேவை அதிகரிப்பால் தற்போது ரூ.30-க்கு விற்பனையாகிறது. எலுமிச்சை மற்றும் வெள்ளரியின் விலை உயர்ந்துள்ளதால், ஓசூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: பனி மற்றும் வெயில் என மாறி மாறி சீதோஷ்ண நிலை நிலவியதால், எலுமிச்சை உற்பத்தி குறைந்துள்ளது, இங்கு அறுவடை செய்யப்படும் எலுமிச்சை பழம் உள்ளூர் சந்தைகள் மற்றும் உழவர் சந்தைக்கு விற்பனை எடுத்துச் செல்கிறோம். முதல் தரமான பழங்களை வெளியூர் சந்தை மற்றும் கர்நாடக மாநில சந்தைக்கு அனுப்பி வருகிறோம். முதல் தரமான எலுமிச்சை கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், எலுமிச்சை பழத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.