அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் போட்டியிடவுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான் மிகவும் முக்கியமான கட்சிகள். இந்நிலையில், வரும் நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும் மீண்டும் களம் காண்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சற்று வித்தியாசமானது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முதலில் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அதற்காக, அமெரிக்காவில் இருக்கும் மாகாணங்கள் அனைத்திலும் வாக்குப்பதிவு நடைபெறும். பின்னர் இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள்.
அதன்படி, குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடையே இதுவரை மாகாணங்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், சராசரியாக 46% வாக்குகளை பெற்று பெரும்பான்மையுடன் டொனால்ட் டிரம்ப் இருக்கிறார். அதேபோல், ஜனநாயக கட்சி சார்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஜோ பைடன் 45% வாக்குகளை பெற்றுள்ளார். இதனால், இவர்கள் இருவரும்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட போகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, இருவரும் தீவிர பிரச்சாரத்தை தொடங்க இருக்கின்றனர். அதன்படி, வரும் ஜூலை 15ஆம் தேதி குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. அப்போது, ஆலோசனை நடத்தி, அதிபர் வேட்பாளர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். அதேபோல், ஆகஸ்ட் 19ஆம் தேதி ஜனநாயக தேசிய மாநாடு சிகாகோவில் நடைபெறவுள்ளது. அப்போது, அவர்கள் ஜோ பைடனை மீண்டும் அதிபர் வேட்பாளராக அறிவிக்க இருக்கிறார்கள்.
மேலும் படிக்க:
வீட்டுக்கு வீடு தனி விமானம்.. வீதியில் பார்க் செய்யும் நகர மக்கள்.. எங்கு தெரியுமா?
இதை தொடர்ந்து செப்டம்பர் 16ஆம் தேதி முதல் இருவரும் நேருக்கு நேர் 3 முறை விவாதிக்க உள்ளனர். ஒவ்வொரு முறையும் 90 நிமிடங்கள் விவாதிக்க இருக்கும் டிரம்பும், பைடனும் நாட்டின் முக்கிய பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து வாக்குறுதி அளிப்பார்கள். அத்துடன், துணை அதிபர் வேட்பாளர்களும் ஒருமுறை விவாதம் நடத்துவர்.
நவம்பர் 5ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, உடனடியாக வாக்குகளின் எண்ணிக்கையும் நடைபெறும். அமெரிக்காவின் ஒரு சில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை வாரக்கணக்கில் நடக்கும். அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, ஜனவரி 6, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, பின்னர் வெற்றிபெற்றவருக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதன்பின்னர், ஜனவரி 20, 2025ஆம் தேதியன்று பதவியேற்பு விழா, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடைபெறும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
