Last Updated:
வாக்கு திருட்டில் ஈடுபட்டுதான் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக, மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தார்.
வாக்கு திருட்டில் ஈடுபட்டுதான் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக, மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தையும் அவர் குறிப்பிட்டு பேச, மக்களவையில் கடும் அமளி நிலவியது.
மக்களவையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, 1952, 1957,1961 மற்றும் 1965ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றதாக தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு தன்னிடம் பதில் உள்ளதாக அமித் ஷா பேசினார்.
அப்போது குறுக்கிட்ட ராகுல்காந்தி, தனது செய்தியாளர் சந்திப்பு குறித்து விவாதம் நடத்த தயாரா என அமித் ஷாவிற்கு சவால் விடுத்தார். எதிர்க்கட்சிகள் நினைப்பது போல நாடாளுமன்றம் நடைபெறாது எனக்கூறிய அமித்ஷா, ராகுல்காந்திக்கு காட்டமாக பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அமித் ஷா, வாக்கு திருட்டில் ஈடுபட்டுதான் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக விமர்சித்தார்.
இந்திய குடியுரிமை பெறும் முன்பே சோனியா காந்தி தேர்தலில் வாக்களித்ததாக அமித் ஷா குற்றஞ்சாட்ட, அமித்ஷா கூறிய தேர்தலில் சோனியா வாக்களிக்கவில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மறுப்பு தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது என எதிர்க்கட்சிகள் கூறுவதாகவும், பிரதமர் மோடியே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றும் அமித் ஷா பேசினார்.
தொடர்ந்து, திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிட்ட அமித் ஷா, வாக்கு வங்கிக்காகவே உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருப்பதாக விமர்சித்தார். உள்துறை அமைச்சரின் ஒட்டுமொத்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, தாங்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் அளிக்காத அமித் ஷா, தற்காப்புக்காகவே பேசியதாக குற்றம்சாட்டினார். தலைமை தேர்தல் ஆணையர் குறித்து பாஜக அரசு பேச மறுப்பதாகக் கூறிய ராகுல் காந்தி, நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் என்றும் தெரிவித்தார்.
December 11, 2025 7:33 AM IST


