இராகவன் கருப்பையா- டோல் கட்டண வசூலிப்பை நிறுத்தினால் அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான ரிங்கிட் செலவாகும் என பொதுப்பணி அமைச்சர் எலக்ஸாண்டர் நந்தா விங்கி செய்த அறிவிப்பு நாட்டு மக்களுக்கு ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல்’தான் உள்ளது.
தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு பேசிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ‘டமாரென’ பல்டியடிப்பது அரசியல்வாதிகளுக்கு கைவந்தக் கலையாகிவிட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், “தவறானத் தகவலுக்கு மன்னித்துவிடுங்கள்,” என ஒரு வார்த்தை கூட சொல்லாமல், கட்டவிழ்த்து விட்ட வெற்று வாக்குறுதிகளுக்கு கொஞ்சமும் வாய்க்கூசாமல் அவர்கள் நியாயம் கற்பிப்பார்கள்.
டோல் கட்டண வசூலிப்பு ரத்து செய்யப்பட்டால் பில்லியன் கணக்கான ரிங்கிட் நஷ்டமாகும் என்பது புதிய கண்டுபிடிப்பா என்ன? இல்லை தானே!
கடந்த 1980களிலும் 90களிலும் முன்னாள் பிரதமர் மகாதீரின் ஆட்சியில் அன்வார் நீண்ட நாள்களாக அமைச்சராக இருந்தவர். அந்த அரசாங்கத்தில் கடைசியாக அவர் நிதியமைச்சராக இருந்தார் என்பதும் நாம் அறிந்ததே.
அப்படியென்றால் தேர்தலில் எவ்வாராயினும் வாக்குகளைக் குவித்துவிட வேண்டும் என்பதற்காக உண்மையை மறைத்து மக்களைக் குழப்பி பொய் வாக்குறுதிகளைக் கட்டவிழ்த்துவிடலாமா, எனும் கேள்வி எழவேச் செய்கிறது.
இதுபோன்ற எழுச்சிமிக்க, பரபரப்பான அறிவிப்புகளை நம்பி மழையிலும் வெயிலிலும் மணிக்கணக்கில் விரிசை பிடித்து நின்று வாக்களிக்கும் பொது மக்கள் பாவம் இல்லையா!
“நாளை முதல் நாம் டோல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பெட்ரோல் விலையும் குறையப் போகிறது,” எனும் நம்பிக்கையில் உற்சாகமாக வாக்களித்துவிட்டு வீடு திரும்பும் நாட்டு மக்களின் நிலை அந்த அரசியல்வாதிகளுக்கு பரிதாபமாகப் படவில்லை என்பது வியப்புதான்.
கடந்த 2018ஆம் ஆண்டில் 2ஆவது முறையாக பிரதமர் பதவியேற்ற மகாதிரும் கூட இப்படிதான் சற்று திமிர்தனமாக அறிக்கை வெளியிட்டு மக்களுக்கு சினமூட்டினார்.
“தேர்தல் வாக்குறுதிகள் பாறையில் எழுதப்படவில்லை, அவை ஒன்றும் ‘பைபள்’ அல்ல” என, அவை நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை எனும் தோரணையில் அகங்காரமாகப் பேசி வாக்காளர்களை ஏலனப்படுத்தினார்.
அப்படியென்றால் வாக்காளர்களுக்கு என்னதான் மரியாதை? அவர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாமா? அவர்கள் அறிவிலிகள் என்றெண்ணி தரம் தாழ்த்தி எடை போட்டு ஏமாற்றலாமா?
இத்தகைய ஒரு செயலை ‘நம்பிக்கை துரோகம்’ அல்லது நம்பிக்கை மோசடி’ என்று வர்ணித்தாலும் தவறில்லை என்றே தோன்றுகிறது.
நடைமுறைபடுத்த முடியாது என்று தெரிந்தும் அப்பட்டமாகவே இப்படி பொய் சொல்லி ஆட்சியைக் கைப்பற்றும் வழக்கம் இதர ஜனநாயக நாடுகளிலும் உள்ளதா அல்லது மலேசியாவில் மட்டும்தான் இந்த அவலமா என்று தெரியவில்லை.
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே,” என சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘மலைக்கள்ளன்’ திரைக்காக டி.எம்.செளந்தர்ராஜன் பாடிய பாடல்தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
ஆக, எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ‘நானே ராஜா, நானே மந்திரி,’ எனும் போக்கைக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவது கூட சுலபமானது என்றும் கூற இயலாது.
அதனால்தான் அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். அதில் ஊறும் அரசியல்வாதிகளை திருத்த வேண்டும் என்றால் வெகுசன மக்கள் அதில் இறங்கி சுத்தம் செய்ய முன்வரவேண்டும். இயலுமா அது? கைகளை கட்டிக்கொண்டு உரிமையை ஊதாரித்தனமாக விலை பேசும் வெகுசன மக்கள், தாங்களாகவே சோரம் போகும் போது, அவர்கள் தங்களின் உரிமையை விபாச்சாரம் செய்கிறோம் என்ற குற்றவுணர்வு எழ வாய்ப்பில்லை என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.