நாடாளுமன்றத்தில் இன்று (9ஆம் தேதி) தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில், பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி; “காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் தங்க சரிகை உள்ளது. அதிலிருக்கும் மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட மற்ற நூல்கள் இல்லை என்றால், தங்க சரிகை ஒன்றும் கிடையாது. நூல்கள் இணைந்துதான் உடலுக்கு இதமான புடவை உருவாகிறது.
அதே போல் தான், பஞ்சாயத்துகள், மக்களவை, மாநிலங்களவை போன்ற அமைப்புகளும், அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நமது தேசம் 1.4 பில்லியன் மக்களாலானது. இந்தியாவின் தேசத் தந்தை நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவின் அமைப்புக்களை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சித்து வருகிறது. இந்தியாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் எவ்வாறு நியமனம் செய்யப்படுகிறார்கள் எனத் தெரியும். பல்கலைக்கழக துணை வேந்தர்கள் முதல் பேராசிரியர்கள் வரை அனைத்து பொறுப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றியுள்ளது” எனப் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ராகுல் காந்தி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, “வாக்காளர் சீர்திருத்தம் குறித்து மட்டுமே பேச வேண்டும்” என்றார். அதேபோல், “எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றில்லை” என மக்களவை சபாநாயகர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “நான் தவறாக எதையும் பேசவில்லை. இந்தியாவின் அனைத்து அமைப்புகளும் வாக்குரிமை என்ற விஷயத்தில் இருந்துதான் உருவாக்கப்பட்டது. எனவே அந்த அமைப்புகளை வாக்குரிமை மூலமாக புறவழிப் பக்கமாக அபகரிக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் நண்பர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
நான் சொல்லக்கூடியது கசப்பான உண்மைகள். அதை எதிர் அணியில் இருக்கக்கூடிய ஆளும் கட்சியினரால் நிச்சயமாக ஏற்க முடியாது. இந்தியாவின் கல்வி அமைப்பு, பல்கலைக்கழக வேந்தர்கள் நியமனம், மூன்றாவதாக தேர்தல் நடைமுறைகள் எவ்வாறு ஆர்.எஸ்.எஸ்.-ஆல் கைப்பற்றப்பட்டுள்ளது எனக் கூறுகிறேன்.
தேர்தல் ஆணையர் நியமனக் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டுள்ளார். ஒருபுறம் பிரதமர், மறுபுறம் உள்துறை அமைச்சர் என நான் குரலற்றவனாய் நிற்கிறேன். இந்தியத் தேர்தல் ஆணையர் நியமனத்தில் என்னுடைய குரல் எடுபடாது. ED, சி.பி.ஐ., ஐ.டி. அனைத்தும் அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர்கள் தண்டிக்கப்பட முடியாதபடி சட்டம் மாற்றப்பட்டுள்ளது. 45 நாட்களுக்கு பிறகு சிசிடிவி வீடியோக்களை அழிக்க ஏன் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. பிரேசில் பெண் ஒருவர் ஹரியானாவில் வாக்காளர் பட்டியலில் உள்ளார்.
பல முறை அவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் தேதியை பிரதமர்தான் முடிவு செய்கிறார். தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் பிரதமர், மத்திய துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என நான் இருக்கிறேன். எனக்கு அந்த குழுவில் எந்த அதிகாரமும் இல்லை.
அவர்கள் இருவரும் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள்தான் தேர்தல் ஆணையர். ஏன் இப்படி இருக்க வேண்டும்? தேர்தல் ஆணையர் எந்த தவறு செய்தாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என சட்டபூர்வமான பாதுகாப்பை கொடுக்க சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. எதற்காக இதை செய்திருக்கிறீர்கள்?
வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து பாஜக தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவில் தேர்தல்கள் நியாயமாக நடைபெறவில்லை. குறிப்பாக ஹரியானா மாநிலத்தில் தேர்தல் வெற்றி அபகரிக்கப்பட்டிருக்கிறது என நான் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறேன். ஆனால் எதற்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் என நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் நீங்கள் இப்படி வாக்குகளை திருடிதான் வெற்றி பெறுகிறீர்கள். EVM இயந்திரங்களை கையாள அனுமதி கொடுத்தால் எங்களால் அதை பரிசோதிக்க முடியும். வாக்குத் திருட்டு என்பது மிகப்பெரிய தேச விரோத செயல்.
எதிர் தரப்பில் (ஆளும் கட்சியினர்) அத்தகைய தேச விரோத செயலில்தான் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேச பாஜகவினர் ஏன் ஹரியானாவில் வாக்களித்தனர்? தேர்தல் ஆணையம் அதற்கு ஏன் பதிலளிக்கவில்லை. வாக்கு திருட்டை தடுப்பதுதான் தேர்தல் சீர்திருத்தமாக இருக்கும்” எனப் பேசினார்.
இடையில், பிரேசிலைச் சார்ந்த மாடல் அழகி இந்திய தேர்தல்களில் 22 முறை வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன் வைத்திருந்த நிலையில் அவரது புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய போது காட்டினார். அதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எதிர்ப்பு தெரிவித்து, இது அவை நடவடிக்கைகளுக்கு உட்பட்டது அல்ல என எச்சரித்தார்.
December 09, 2025 6:35 PM IST
“வாக்குத் திருட்டு தேச விரோத செயல்.. ஆளும் தரப்பு அதை செய்கிறது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

