இன்னொருபுறம், கடந்த 2020, 2015 பேரவைத் தோ்தல்களில் முறையே 67, 62 தொகுதிகளில் வென்ற ஆம் ஆத்மிக்கு இம்முறை 22 இடங்களே கிடைத்தன. காங்கிரஸுக்கு தொடா்ந்து மூன்றாவது முறையாக எந்தத் தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை.
தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது.
இத்தேர்தலில் முக்கிய குற்றச்சாட்டாக வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பெரும் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி புகார் அளித்திருந்தது கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது.
தில்லியிலுள்ள 70 தொகுதிகளிலும் கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தல் முதல் கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வரையிலான நான்கு ஆண்டு காலகட்டத்தில் மட்டும், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக 4,16,648 பேர் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனர்.
இன்னொருபுறம், கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த பிப்ரவரி வரையிலான ஏழே மாதங்களில் 3,99,362 வாக்காளர்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனர்.

