Last Updated:
வாக்காளர் பட்டியல் பிழைகள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசியல் கட்சிகள், ஆட்சேபனை காலத்திலேயே இதை கூறியிருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
“நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் ‘பிழைகள்’ உள்ளதாக சில அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. வாக்காளர் பட்டியல் மீது ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய காலத்திலேயே இதைக் கூறியிருக்க வேண்டும்” என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, போலி வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பதாகப் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக பெங்களூருவில் ஒற்றை படுக்கை அறை வசதி கொண்ட வீட்டின் முகவரியில் 80 வாக்காளர்கள் இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து இந்த விவகாரம் தேசிய அளவில் தற்போது பெரும் கவனம் பெற்றுள்ளது.
இதேபோல், பிகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் அங்கு மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
பிகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் 65 லட்சம் நபர்கள் போலி வாக்காளர்கள் என அவர்களைப் பட்டியலில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையம்.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. உதாரணத்திற்கு இளம் பெண் ஒருவருக்கு 124 வயது என்று வாக்காளர் பட்டியலில் இருந்தது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியது.
இதற்கிடையில், பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதில், பிகாரில், இறந்ததாகக் கூறி தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய இருவரை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதிர்ச்சி கொடுத்தார் செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ். அதேபோல், தேர்தல் ஆணையம் இறந்ததாகக் கூறிய 7 பேருடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேநீர் அருந்தி அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதுவும் பெரும் கவனம் பெற்றது.
இந்தச் சூழலில், நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை அறிவித்துள்ளது. இதற்கிடையில், தேர்தல் ஆணையம் இன்று ஒரு விளக்கம் கொடுத்துள்ளது. அதில், “நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் ‘பிழைகள்’ உள்ளதாக சில அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. வாக்காளர் பட்டியல் மீது ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய காலத்திலேயே இதைக் கூறியிருக்க வேண்டும். அதற்காகத்தான் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடம் வாக்காளர் பட்டியல் தரப்படுகிறது. அப்போதே கூறியிருந்தால் அதிகாரிகள் ‘பிழைகளை’ சரி செய்திருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளது.
August 16, 2025 10:11 PM IST
“வாக்காளர் பட்டியல் மீது ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய காலத்திலேயே இதைக் கூறியிருக்க வேண்டும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்


