கிள்ளான்:
வாகன உரிமையாளர்கள் சிரமமின்றிப் பரிசோதனைகளைச் மேற்கொள்வதற்காக, கணினிமயமாக்கப்பட்ட வாகனப் பரிசோதனை மையமான ‘புஸ்பாகோம்’ (Puspakom), வரும் ஜனவரி மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்படத் திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் 7 நாட்களும் இயங்கும் சேவை தொடங்கப்பட உள்ளது. அதற்குப் பொதுமக்கள் அளிக்கும் வரவேற்பு மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஜனவரி முதல் 24 மணி நேரச் சேவை முழுமையாக அமல்படுத்தப்படும் எனப் புஸ்பாகோம் தலைமை நிர்வாக அதிகாரி மஹ்மூத் ரசாக் பஹ்மான் தெரிவித்தார்.
ஊழியர்களின் பணிச்சூழலை மேம்படுத்துவது குறித்துப் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், “தற்போது நாளொன்றுக்கு 12 மணி நேரமாக இருக்கும் பணிநேரத்தைக் குறைத்து 8 முதல் 10 மணி நேரமாக மாற்றுவது மற்றும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இன்று நடைபெற்ற ‘ஜிகெக் ஆட்டோ வீக்கெண்ட் 2026’ நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
வாகன உரிமையாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று பரிசோதனை செய்யும் ‘ஆன்-சைட்’ (On-site inspection) சேவைகள் விரிவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சமுதாய மாற்றத்திற்குப் பங்காற்றும் நபர்களைக் கெளரவிக்கும் வகையில் ‘புஸ்பாகோம் டவரிங் மலேசியன் அவார்ட்ஸ்’ (Puspakom Towering Malaysian Awards) என்ற புதிய விருதுத் திட்டமும், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்றார்.



