இலங்கையின் வாகனத்துறையானது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் காரணமாக பாரிய பின்னடைவைச் சந்திக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற புதிய வாகன அறிமுக நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய கியா மோட்டார்ஸ் லங்கா (Kia Motors Lanka) நிறுவனத்தின் தலைவர் மகேன் தம்பையா இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 310 இலிருந்து 320 ஆக அதிகரித்துள்ளதால், வாகன இறக்குமதி விலைகள் பெருமளவு உயரும்.
புதிய வாகனப் பதிவுகள்
உதாரணமாக, 30,000 டொலர் பெறுமதியான ஒரு வாகனத்தின் விலை சுமார் 10 இலட்சம் ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வாகன இறக்குமதி மீள ஆரம்பிக்கப்பட்ட போது காணப்பட்ட ஆர்வம் தற்போது குறைவடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 55,365 ஆக இருந்த புதிய வாகனப் பதிவுகள், பெப்ரவரியில் 51,682 ஆகக் குறைந்துள்ளன.
அத்துடன், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது.
2025 இல் 8.076 பில்லியன் டொலராக இருந்த இந்த வருமானம், எதிர்வரும் காலங்களில் 2 அல்லது 3 பில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடைந்தால் அது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் விலை உயர்வால் மின்சார வாகனங்கள் மீது ஆர்வம் அதிகரித்தாலும், மின்கல மாற்றுச் செலவு மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக மக்கள் தற்போதைக்கு ஹைப்ரிட் (Hybrid) வாகனங்களையே அதிகம் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

