வழிபாட்டுத் தலங்களை ஒருதலைப்பட்சமாக உடைப்போம் என்று மிரட்டிக் கொண்டிருக்கும் தனிநபர்களுக்கு எதிராக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து அட்டர்னி ஜெனரல் (ஏஜி) உடனடியாக ஒரு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ நேற்று வலியுறுத்தினார்.
இந்த வழிபாட்டுத் தலங்கள் அமைந்திருக்கும் நிலம் தொடர்பான அந்தஸ்து, கட்டப்பட்டிருக்கும் கோவில்கள் உட்பட பல விவகாரங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களுக்காக இந்தப் பிரச்சினைகள் தலையெடுத்துள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் இதற்கு மிகச் சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்குரிய கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்றன.
சட்டம், சம்பந்தப்பட்ட நிலத்திற்கு விண்ணப்பிக்கும் உரிமை போன்றவை இதில் அடங்கி இருக்கின்றன. முறையான நடைமுறைகளின் கீழ் மிகவும் அமைதியான முறையில் பலவற்றுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கின்றன என்பதை டிஜிட்டல்துறை அமைச்சருமான அவர் நேற்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் இந்தப் பிரச்சினைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கு தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சில தரப்பினர் இந்த ஆலயங்களை இடித்துத் தரைமட்டமாக்கப்போவதாக மிரட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தை அவர்கள் சொந்தமாகக் கையில் எடுத்துள்ளனர் என்று டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவற்றின் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை காண முடியவில்லை. வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவை. பொது ஒழுங்கையும் சுபிட்சத்தையும் கட்டிக்காப்பதற்கு மிகக்கவனமாக இந்த விவகாரத்தைக் கையாள வேண்டி இருக்கிறது.
இவ்விவகாரம் குறித்து அமைச்சரவையில் பலமுறை பேசியிருக்கிறேன். இருப்பினும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அட்டர்னி ஜெனரலின் கைகளில்தான் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. எனவே இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராக ஏன் இவ்வளவு மெதுவாகச் செயல்படுகிறது? நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் அதிகரித்து வரும் பல்வகையான கருத்துகள் மாறுவதற்கு என்ன செய்யப்போகிறோம் என்பதை அட்டர்னி ஜெனரல் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.




