அலோபதி மருத்துவத்தில் தவறான கருத்துகள் பரப்பப்படுவதாக, பதஞ்சலி பொருட்கள் தொடர்பான விளம்பரத்தில் பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அவர் மீது இந்திய மருத்துவ கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டது. ஆனாலும், பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்து அதுபோன்ற விளம்பரங்களை வெளியிட்டதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் பாபா ராம்தேவும், பதஞ்சலி நிறுவனர் பாலகிருஷ்ணாவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததோடு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியும் மன்னிப்பு கோரினர். ஆனால், இருவரது மன்னிப்பும் வெறும் வாய் வார்த்தையாக இருப்பதாகக் கூறி, நீதிமன்றம் அதை நிராகரித்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தயவு காட்ட விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதிகள், மன்னிப்பு என்பது வெறும் காகிதத்தில் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத உத்தராகண்ட் அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், பாபா ராம்தேவ் உள்ளிட்ட இருவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.




