Last Updated:
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள ஒரு கோடி இந்தியர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை நடத்துகிறது.
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள ஒரு கோடி இந்தியர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
ஈரான், இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்திய நிலையில் அங்கு வான்வெளிகள் மூடப்பட்டன. இதனால் பயணிகள் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து தாய் நாடு திரும்ப இந்தியர்கள் விரும்பினாலும் வர முடியாத நிலை உள்ளது. அதனால், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய வெளியுறவு அமைச்சம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நம்முடைய விமானங்களை அனுப்பி மீட்கலாமா என்றும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாகவும், ஈரானுக்கு ஆதரவாக வன்முறையை தூண்டும் வகையில் பேசும் பிரசாரகர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படியும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் காஷ்மீர், லக்னோ, சென்னை மற்றும் கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்.. ஒரு கோடி இந்தியர்களின் நிலை என்ன? – வெளியுறவு அமைச்சகம் தீவிர ஆலோசனை!


