கோலாலம்பூர்:
சொந்த வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 50 வயது மீனவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதித்துச் சண்டாக்கான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அந்த நபர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி ரோஸ்லின்டா ரசாலி இத்தண்டனையை வழங்கி உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 8 வயதாக இருந்தபோது, 2023-ஆம் ஆண்டு காலை 8:00 மணியளவில் கிராமத்து வீட்டில் வைத்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 5:00 மணியளவில் சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது விருப்பத்திற்கு மாறாக இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 29 அன்று, இக்கொடூரம் குறித்துச் சிறுமி தன் பள்ளிச் தோழியிடம் கூறியுள்ளார். அத்தோழி உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்கவே, அன்றைய தினமே சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டிற்கு (பிரிவு 376(3)) 20 ஆண்டுகள் சிறை மற்றும் 20 பிரம்படிகளும்,
இயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டிற்கு (பிரிவு 377C): 18 ஆண்டுகள் சிறை மற்றும் 20 பிரம்படிகளும் விதிக்கப்பட் டன. அத்தோடு குற்றவியல் சட்டத்தின் கீழான இவ்விரு சிறைத் தண்டனைகளும் ஏககாலத்தில் (Concurrently) அனுபவிக்க உத்தரவிடப்பட்டதால், இதன் மூலமான தண்டனை காலம் 20 ஆண்டுகள் ஆகும்.
குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றச் சட்டம் 2017 (பிரிவு 16(1)): நம்பிக்கைக்குரிய உறவில் இருந்து கொண்டு குற்றம் புரிந்ததற்காகக் கூடுதல் தண்டனையாகத் தலா 1 ஆண்டு சிறை மற்றும் 2 பிரம்படிகள் வீதம் மேலும் 2 ஆண்டுகள் சிறையும் சேர்க்கப்பட்டது.
இதன் மூலம், குற்றவாளி ஒட்டுமொத்தமாக 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளையும் அனுபவிக்க வேண்டும்.
விசாரணை முடிவில், வெளிநாட்டவரான அந்த குற்றவாளி தனது சிறைத் தண்டனையை நிறைவு செய்தவுடன், அவரை மலேசியக் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் B. யுவன் ஆஜரானார்.



