இலக்கவியல் தொழில்நுட்ப நம்பகத்தன்மை என்பது இலக்கவியல் தொழில்நுட்ப உருமாற்றத்திற்கான அஸ்திவாரம் என இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பதிவு செய்தார். சீனா ஷாங்காயில் நடைபெற்ற ASEAN-சீனா டிஜிட்டல் கூட்டுறவு மன்றத்தில், பயனுள்ள மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் மாற்றத்திற்கு நம்பிக்கையே அடிப்படையாகும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
மலேசியா ஆசியான் வட்டாரத்தில் இலக்கவியல் தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாக விளங்க முற்படும் நிலையில் நம்பகத்தன்மை என்பது இலக்கவியல் முன்னேற்றத்திற்கான உத்திகளை செயல்படுத்தவும்,பிறநாடுகளுடனான கூட்டுறவை வழியமைக்கவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எனவும் அவர் கூறினார்.
வளர்ந்துவரும் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சுயமாக இயங்குவதோடு மட்டும் அல்லாமல், கொடுக்கப்பட்ட பணிகளை சரியாகச் செய்து முடிப்பதோடு, சுயமாக முடிவெடுக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
அதோடு பொதுச் சேவைத் துறையிலும், தொழில்துறையிலும் பெரும் புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றது என்பதை மறுக்க இயலாது. இருந்தாலும் கூட,பாதுகாப்பாக, நெறிமுறைகளுக்குட்பட்டு, சமூக விழுமியங்களுடன் ஒத்தியங்கும் வகையில் செயல்படுகிறது என்கிற நம்பிக்கை மகக்ளுக்கு இருந்தால் மட்டுமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வெற்றி சாத்தியமாகும்எனவும் அமைச்சர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு (AI) 2030 ஆம் ஆண்டுக்குள் உலகப் பொருளாதாரத்திற்கு 17.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற துறைகளை மாற்றியமைக்கும். இருப்பினும், இந்த திறனை முழுமையாக அடைய, வெறும் கண்டுபிடிப்புகள் மட்டும் போதாது; நம்பிக்கையை ஊக்குவிக்கும் நிர்வாகக் கட்டமைப்புகளும் தேவை.
இலக்கவியல் கொள்கைகளால் உலகளாவிய ரீதியில் கடந்த ஆண்டில் மட்டும் RM163.6 பில்லியன் டிஜிட்டல் முதலீடுகளை மலேசியா ஈர்த்துள்ளது. வாழ்வியல் நெறிமுறைக்குட்பட்டு அனைத்துத் தட்டு மக்களையும் உள்ளடக்கி, வெளிப்படையான இலக்கவியல் கொள்கைகளுக்கு மலேசியா முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதுவே இலக்கவியல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வரும் மலேசியாவிற்கு உலக அங்கீகாரம் கிடைக்க வகை செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு, குறிப்பாக அகண்ட மொழி மாதிரிகள் (LLM) பயன்பாட்டை ஆதரிக்கும் வகையில், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புகளை (certification frameworks) நிறுவுவதற்குப் பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கட்டமைப்புகள், AI–செயற்கை நுண்ணறிவுஅமைப்புகள் தேசிய முன்னுரிமைகள், கலாச்சார சூழல்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிப்பதை உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ளன. இது AI பயன்பாட்டின் ஒவ்வொரு நிலையிலும் நம்பிக்கையை நிலைநிறுத்த உதவும்.
ஆசியான் மாநாட்டை மலேசியா தலைமை ஏற்கும் நிலையில், ஆசியான் வட்டார நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு மலேசியா தலைமையேற்கும். இதன் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு (AI) ஆட்சிமுறை, நெறிமுறைகள் மற்றும் எல்லை தாண்டிய கண்டுபிடிப்புகளுக்கான பகிரப்பட்ட தரநிலைகளை மேம்படுத்தும் ஒரு தளமாக ஆசிய AI பாதுகாப்பு வலையமைப்பை (Asian AI Safety Network)உருவாக்க மலேசியா தகுந்த முயற்சிகளை முன்னெடுக்கும்என அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.