பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபீனை, கட்சியின் நாடாளுமன்றக் குழு நியமித்துள்ளது.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான நிதின் நபீன், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிகார் மாநில பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நபின் கிஷோர் சின்ஹாவின் மகனான நிதின் நபின், தற்போது பிகார் மாநில அமைச்சராக இருக்கிறார்.
அண்மையில் நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்க நிதின் நபீன் முக்கியப் பங்காற்றியதாக கூறப்படுகிறது. அவரது உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக செயல் தலைவர் பொறுப்பை பாஜக தலைமை வழங்கியிருக்கிறது.
ஒருங்கிணைந்த பிகார் மாநிலத்தில் 1980ஆம் ஆண்டு ராஞ்சியில் பிறந்தவர் நிதின் நபின். தந்தை மறைவுக்குப் பிறகு, அரசியலில் அடியெடுத்து வைத்த இவர், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற பாட்னா மேற்கு தொகுதியின் இடைத்தேர்தலில், 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது 26 வயதில் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
அதன் பின்னர், 2010, 2015, 2020 மற்றும் கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் என தொடர்ந்து 4 முறை பங்கிபூரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
2021ஆம் ஆண்டு நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த நிதின் நபீன், தற்போது சாலை மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார்.
வலுவான ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட நிதின் நபீன், பாஜக தேசிய செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய பொதுச்செயலாளர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
பூத் அளவில் கட்சியை வலுப்படுத்துவதில் வல்லவரான நிதின் நபீன், தற்போது பாஜகவின் இளைஞர் பிரிவான பி.ஜெ.ஒய்.எம். செயலாளராகவும் உள்ளார்.
தலைமைக்கு நம்பிக்கைக்குரியவராகவும், கட்சியின் ஒழுங்கு குழுத் தலைவராகவும் செயல்பட்டு வந்த நிதின் நபீன், தேசிய தலைவர் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்ற கண்ணோட்டத்தில் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இளம் தேசிய செயல் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நிதின் நபீனை கடின உழைப்பாளி என புகழ்ந்துள்ளார். அவருடைய பணிவான இயல்பு மற்றும் அர்ப்பணிப்பால் கட்சியை மேலும் வலுப்படுத்துவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய், அத்வானி தொடங்கி…. அமித் ஷா, நட்டா உள்ளிட்டோர் அலங்கரித்த பதவியில் நிதின் நபின் மூலம் இளம் ரத்தத்தை பாய்ச்ச பாஜக தயாராகியுள்ளது.
December 15, 2025 10:19 AM IST

