சிரம்பான்:
இன்றைய தேர்தல் சூழலில் வலிமையான பெரும்பான்மை பெறுவது சுலபமல்ல என அம்னோவை அதன் துணைத் தலைவர் ஜொஹாரி கானி நினைவூட்டினார்.
இன்றைய வாக்காளர்கள், குறிப்பாக இளைய தலைமுறை, உண்மையிலும் நம்பகத்தன்மையுள்ள, சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தக்கூடிய மற்றும் சரியான நெறிமுறையான தலைவர்களை விரும்புகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த பொதுத்தேர்தலுக்கு புதிய யுக்தியுடன் அம்னோ செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“இளைய வாக்காளர்களுக்கு தலைவர்களிடமிருந்து மிக உயர்ந்த எதிர்பார்ப்புகள் உள்ளன. அவர்கள் உள்ளூர் மற்றும் உலகளாவிய விவகாரங்களில் அறிவுடையவர்களாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும், நேர்மையும் நம்பகத்தன்மையும் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்,” என ஜொஹாரி கூறினார்.
அம்னோ தற்போதைய சூழலில் தங்களை இன்னும் வெளிப்படையாகவும், கடுமையாக உழைக்கும் சக்தியுடன் கூடியதாகவும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“நாம் எப்போதும் அதிகாரத்தில் இருப்போம் என்று நினைக்கக் கூடாது. சில நேரங்களில் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். இன்று உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்களது தனித்துவமான கொள்கைகள் உள்ளன. எனவே வலிமையான பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைப்பது மிகவும் கடினம்,” என அவர் கூறினார்.