Last Updated:
தனது குடும்ப கஷ்டங்களைப் பகிர்ந்துகொண்ட காவ்ரா, தினமும் தனது குழந்தைகளுக்கு உணவளிக்க 20 சதவீத வட்டிக்கு கடன் வாங்க வேண்டி இருக்கிறது என்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் ரேகா கல்பெலியா என்ற 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது 17வது குழந்தையைப் பெற்றெடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் இதற்கு முன்பு எத்தனை குழந்தை பெற்றுள்ளார் என்ற விவரம் எதுவும் மருத்துவ ஊழியர்களுக்குத் தெரியாததால், அசாதாரண சூழ்நிலையில் பிரசவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு ரேகா பெற்றெடுத்த 16 குழந்தைகளில் நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள், பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது உயிரோடு இருக்கும் குழந்தைகளில் பலர் பெரியவர்களாகிவிட்டனர். அதில் ஐந்து பேர் ஏற்கனவே திருமணமாகி தனியாக குடும்பங்களை நடத்தி வருகின்றனர். தற்போது பிறந்துள்ள குழந்தை பணரீதியாகவும், சமூக ரீதியாகவும் இவர்களுடைய குடும்பம் படும் சிரமங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
நீண்டகாலமாக தங்களுடைய குடும்பம் எதிர்கொண்டுவரும் சிரமங்களைப் பற்றி வெளிப்படையாக ஊடகங்களிடம் கூறியுள்ளார் ரேகாவின் மகள் ஷீலா கல்பெலியா. பல ஆண்டுகளாக தங்களது குடும்பம் கடுமையான சவாலை சந்தித்து வருவதாகவும், தனது தாய்க்கு இத்தனை குழந்தைகள் உள்ளனரா என்பதைத் தெரிந்துகொள்ளும் மக்கள் எப்போதும் அதிர்ச்சியடைவதாகவும் ஷீலா கூறுகிறார்.
இவ்வளவு பெரிய குடும்பத்தை காப்பாற்றுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அத்தனை குழந்தைகளையும் நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அவரது தந்தை காவ்ரா கல்பெலியாவும் பெரும் சுமையை சந்தித்து வருகிறார். நிலையான வருமானமோ அல்லது வீடோ இல்லாத காரணத்தினால், பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இவர்களது குடும்பம் உயிர்வாழ்ந்து வருகிறது.
தனது குடும்ப கஷ்டங்களைப் பகிர்ந்துகொண்ட காவ்ரா, தினமும் தனது குழந்தைகளுக்கு உணவளிக்க 20 சதவீத வட்டிக்கு கடன் வாங்க வேண்டி இருக்கிறது என்கிறார். ஏற்கனவே வாங்கிய கடனுக்கு லட்சக்கணக்கான ரூபாய்களை திருப்பிச் செலுத்திவிட்டதாகவும், ஆனாலும் வட்டித் தொகையை இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்க முடியவில்லை என்றும் கூறுகிறார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின்கீழ் இவருக்கு வீடு கட்ட அனுமதி கிடைத்த போதிலும், நில உரிமைப் பிரச்சனைகள் காரணமாக தற்போதுவரை இவர்களது குடும்பத்தினர் வீடு இல்லாமல் இருக்கின்றனர்.
தற்போதுள்ள நிலம் தனது பெயரில் இல்லாததால், அதில் வீடு கட்ட முடியாது என்று கூறும் காவ்ரா, அன்றாட உணவிற்கோ, குழந்தைகளைத் திருமணம் செய்துவைப்பதற்கோ தங்களிடம் எந்தவித சொத்தும் இல்லை என்கிறார். பணம் இல்லாத காரணத்தினால் தனது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்குகூட முடியவில்லை என்றும் அவர் வேதனையோடு கூறுகிறார்.
பிரசவத்திற்காக ஜாடோல் சமூக சுகாதார மையத்தில் ரேகா அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. ரேகா குடும்பத்தினர் ஆரம்பத்தில் முக்கிய மருத்துவ தகவல்களை மறைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, இது ரேகாவின் நான்காவது பிரசவம் என்று கூறப்பட்டதாகவும், பின்னர்தான் தங்களுக்கு உண்மை நிலவரம் தெரியவந்ததாகவும் மகப்பேறு மருத்துவர் கூறுகிறார்.
August 29, 2025 3:09 PM IST


