Tamilnadu
oi-Vignesh Selvaraj
சென்னை: தமிழகத்தில் பொதுமக்கள் பதிவு அலுவலகத்திற்கு அலையாமல், வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘வருகையில்லா ஆவணப்பதிவு’ திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் வகையில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையினை தமிழக பதிவுத்துறை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே இணையவழியில் பொதுமக்கள் தங்கள் ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும். வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர்கள் 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்தோ அல்லது திருத்தத்திற்காக திருப்பி அனுப்பியோ அல்லது நிராகரித்தோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த முறையில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சார் பதிவாளர்களால் தற்போதுள்ள நடைமுறையில் உள்ளபடி சரிபார்க்கப்பட்டு, சட்ட விதிகளுக்குட்பட்டு பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்டு, ஆவணப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட பயனர் உள்நுழைவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பின்னர், பதிவு செய்யப்பட்ட செய்யப்பட்ட ஆவணத்தை 60 நாட்களுக்குள் தேவையான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 60 நாட்கள் முடிந்த பின்னர், பொதுமக்கள் நடைமுறையில் உள்ள முறையின்படி சான்றிட்ட நகலுக்கு விண்ணப்பித்து பதிவு செய்யப்பட்ட ஆவணத்தைப் பெறலாம்.
முதற்கட்டமாக, புதிய மனை பிரிவுகளின் முதல் விற்பனை மற்றும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆகிய இரண்டு வகை ஆவணங்களுக்கு இந்த ஆன்லைன் பத்திரப்பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டது. இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இது தொடர்பாக தமிழக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வருகையில்லா ஆவணப் பதிவுத் திட்டம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான கடந்த 44 நாட்களில் மட்டும் மொத்தம் 1,00,134 ஆவணங்கள் இந்த முறையில் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
வருகையில்லா ஆவணப் பதிவு என்ற நடைமுறை 17.08.2026 அன்று முதல்வர் விஜய் தொடங்கப்பட்டது. இது, மனைப்பிரிவில் முதல் விற்பனை (First sale of Plot) மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் விற்பனை (First sale of Flat) ஆகிய இரண்டு ஆவணங்களைப் பொறுத்து கட்டாயமாக்கப்பட்டது.
இத்திட்டம் பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிலவிற்பனையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சார்ந்த உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு மற்றும் இரசீது ஆவணங்கள் ஆகியவை 15.09.2026 முதல் இத்திட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டது.
இந்த திட்டம் கட்டாயமாக்கப்பட்ட 17.08.2026 முதல் 30.09.2026 வரையுள்ள 44 நாட்களிலேயே 1,00,134 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஐந்து லட்சம் பொதுமக்களின் கால விரையம் மற்றும் தேவையற்ற செலவு குறைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்திட்டம் படிப்படியாக பிற ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகளின் ஆலோசனைகள், பின்னூட்டத்தின்படி மென்பொருளில் மாற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

