Last Updated:
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கார் சக்கரத்தில் சிக்கிய தொண்டர் சிங்கையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி தலைவரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டியின் கார் சக்கரத்தில் சிக்கிய தொண்டர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆந்திரப்பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டம், வெண்ட்ட பள்ளி கிராமத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அக்கட்சியின் உள்ளூர் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் குவிந்து ஜெகன்மோகன் ரெட்டியை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அப்போது, ஜெகன்மோகன் ரெட்டிக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்க அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தொண்டர் சிங்கையா முயன்றார். ஆனால், கால் தவறி கீழே விழுந்த சிங்கையா மீது ஜெகன்மோகன் சென்ற காரின் முன் சக்கரம் ஏறி இறங்கியது.
படுகாயமடைந்த தொண்டரை மீட்ட கட்சித் தொண்டர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். ஜெகன்மோகன் ரெட்டியின் கார் சக்கரத்தில் தொண்டர் சிங்கையா சிக்கி பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
June 22, 2025 9:56 PM IST


