கூச்சிங்:
வரவிருக்கும் சரவாக் மாநிலத் தேர்தலில் 17 புதிய சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுப் போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ ராம்லான் ஹருன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கூச்சிங் வடக்கு மாநகராட்சி மையத்தில் நடைபெற்ற சரவாக் எல்லை நிர்ணய ஆய்வுப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லை நிர்ணய ஆய்வு நடைமுறைகள் முழுமையாக முடிவடைய நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
2027 பிப்ரவரி கெடு:தற்போதைய சரவாக் மாநில அரசாங்கத்தின் பதவிகாலம் வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகின்றது. “தேர்தல் எல்லை நிர்ணயச் சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிவடைவதற்கு 2027 பிப்ரவரிக்கு மேல் கால அவகாசம் தேவைப்படும். எனவே, சட்டப்படி நாம் மேற்கொள்ள வேண்டிய அனைத்துப் படிநிலைகளையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அடுத்த மாநிலத் தேர்தலில் இந்தப் புதிய 17 தொகுதிகளைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை என்றே எதிர்பார்க்கிறேன்” என்று, டத்தோஸ்ரீ ராம்லான் ஹருன் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் சரவாக் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின்படி, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 82-இலிருந்து 99-ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், எல்லை நிர்ணய ஆய்வு மற்றும் தொகுதி சீரமைப்பு தொடர்பில் பொதுமக்களிடமிருந்து இதுவரை 18 அதிகாரப்பூர்வ எதிர்ப்புகள் பெறப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ராம்லான் ஹருன் குறிப்பிட்டார்.
குறிப்பாக வாக்குப்பதிவு மைய மாற்றங்கள் மற்றும் சாரிகேய், பிந்துலு, சிபு ஆகிய பகுதிகளில் உள்ள சில தொகுதிகளின் பெயர்கள் தொடர்பாகவே இந்த எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் மிகத் துல்லியமாக மறுஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.



