Last Updated:
பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை இவரே.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை பி.வி.சிந்து படைத்துள்ளார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் யுஃபியை எதிர்த்து களம் கண்டார்.
இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் பி.வி. சிந்து 15 க்கு 10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், சீன வீராங்கனை சென் யுஃபி தொடை தசைநார் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.
இதனால், பி.வி.சிந்து 21-19, 15-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முன்னதாக, 2011 இல் சாய்னா நேவால் ஜப்பான் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சி அல்லது இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியை பி.வி.சிந்து எதிர்கொள்வார்.
Jul 18, 2026 11:52 AM IST


