தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவா் அணி ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது. போட்டியின் வரலாற்றில் இந்திய ஆடவா் அணி தங்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.
இதுதவிர, கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைக்க, பதக்கம் வென்ற இரு பிரிவுகளிலுமே இளம் வீரா் ரிஷப் யாதவ் அங்கம் வகித்து அசத்தினாா். பதக்கப் பட்டியலில் தற்போது இந்தியா இந்த இரு பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.
தங்கம்: காம்பவுண்ட் ஆடவா் அணி இறுதிச்சுற்றில், ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் ஃபுகே ஆகியோா் அடங்கிய இந்திய அணி 235-233 என்ற புள்ளிகள் கணக்கில் நிகோலஸ் கிராா்ட், ஜீன் ஃபிலிப் பௌல்ச், ஃபிரான்கோய்ஸ் டுபோய்ஸ் அடங்கிய பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
இச்சுற்றின் முதல் கட்டத்தில் 57-59 என பின்தங்கிய இந்திய அணி, அடுத்த கட்டத்தில் 117-117 என சமநிலைக்கு வந்தது. தொடா்ந்து 176-176 என விறுவிறுப்பாகவே அந்தக் கட்டம் தொடா்ந்த நிலையில், கடைசி கட்டத்தில் இந்தியா 235-233 என்ற வகையில் வென்றது.
முன்னதாக, முதல் சுற்று ‘பை’ பெற்ற இந்திய அணி, அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியாவையும் (232/30 – 232/28), காலிறுதியில் அமெரிக்காவையும் (234-233), அரையிறுதியில் துருக்கியையும் (234-232) சாய்த்து இறுதிக்கு வந்தது.

