Last Updated:
ஏப்ரல் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி ஆனது, ஆண்டுக்கு ஆண்டு (YoY) 12.6 சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவாக ரூ.2,36,716 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் என்பது நிதியமைச்சரை அதன் தலைவராகவும், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களையும் உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு கூட்டாட்சி அமைப்பாகும். சமீபத்தில் வெளியான அரசு தரவுகளின் படி, ஏப்ரல் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி ஆனது, ஆண்டுக்கு ஆண்டு (YoY) 12.6 சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவாக ரூ.2,36,716 கோடியாக உயர்ந்துள்ளது.
இதற்கு முன்பு ஏப்ரல் 2024இல், சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) அதிகபட்ச வசூல் ரூ.2.10 லட்சம் கோடி, அதாவது 2,10,267 கோடியாக பதிவானது. முன்னதாக, மார்ச் 2025இல், ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ.48,634 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி வசூல் ரூ.59,372 கோடியாகவும் இருந்தது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் செஸ் வசூல் முறையே ரூ.69,504 கோடி மற்றும் ரூ.12,293 கோடியாகவும் இருந்தது.
எனவே, உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் ஜிஎஸ்டி வருவாய் 10.7 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட ரூ.1.9 லட்சம் கோடியாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் வருவாய் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ.46,913 கோடியாகவும் உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி ரீஃபண்டு மூலம் பணத்தை திரும்ப வழங்குதல் 48.3 சதவீதம் அதிகரித்து ரூ.27,341 கோடியாக இருந்தது. ரீஃபண்ட்கள் திரும்ப வழங்கப்பட்ட பிறகு, ஏப்ரல் மாதத்திற்கான நிகர ஜிஎஸ்டி வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து ரூ.2.09 லட்சம் கோடியை தாண்டியது.
“இதுவரை இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் உயர்ந்துள்ளது, நாட்டின் பொருளாதார நடவடிக்கையின் வலுவான குறிகாட்டியாக பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்தின் தொடர்ச்சியான மீட்பு மற்றும் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. அதே வேளையில், ஆண்டு இறுதி சமரச செயல்முறையும் இதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது, இது பொதுவாக தொழில் நிறுவனங்களால் ஆண்டு முழுவதும் தங்களது வருமானத்தை சீரமைக்க, கூடுதல் வரி செலுத்துதல்களுக்கு வழிவகுக்கிறது” என்று கேபிஎம்ஜி (KPMG) நிறுவனத்தின் மறைமுக வரிகளின் தலைவரும், பார்ட்னருமான அபிஷேக் ஜெயின் கருத்து தெரிவித்து உள்ளார்.
ஜூலை 1, 2017 அன்று ஜிஎஸ்டி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், அதை செயல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதும் பின்னர் உறுதி செய்யப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் என்பது நிதியமைச்சரை அதன் தலைவராகவும், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களையும் உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு கூட்டாட்சி அமைப்பாகும். ஜிஎஸ்டி கவுன்சிலின் சமீபத்திய கூட்டம் டிசம்பர் 21 அன்று ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடைபெற்றது.


