Last Updated:
தொடர் கனமழை காரணமாக பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
தொடர் கனமழையால் தலைநகர் டெல்லி தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குருகிராம் தேசிய நெடுஞ்சாலை, சவுக் மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் தண்ணீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஆகஸ்ட் மாதத்தில் 431 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பஞ்சாப்பின் லுதியானா, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தண்ணீர் தேங்கின. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தன. வெள்ள பாதிப்புகள் குறித்து பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மானிடம் பேசிய பிரதமர் மோடி, வேண்டிய உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார். அரியானாவில் கழிவு நீர் கலந்த மழை நீரில் மக்கள் நடந்து சென்றனர். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக் கூறி அரசை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் படகுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தர பிரதேசத்தில் வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த மழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டது. வீடுகளில் சிக்கித் தவித்த மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் நாட்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் சேதங்கள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
September 02, 2025 7:45 AM IST


