[ad_1]
Last Updated:
மத்தியபிரதேசம் கார்கோன் மாவட்டம் குஷ்பு பிப்லியா, வரதட்சணை கேட்டு கணவன் குடும்பத்தால் சூடு வைத்து கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேசத்தில் வரதட்சணை கொண்டு வராத மனைவியை கணவன் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அண்மையில் உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் குடும்பத்தினர், வீட்டிற்கு வந்த மருமகளை எரித்து கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியது. தற்போது அதுபோன்ற ஒரு சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண் கணவன் குடும்பத்தாரிடமிருந்து தப்பித்து காவல்நிலையத்திற்கு வந்து தஞ்சமடைந்துள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணுக்கு கணவனால் நிகழ்ந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?
மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான குஷ்பு பிப்லியா என்ற இளம் பெண்ணுக்கும், திலீப் பிப்லியா என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்தே கணவன் அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். பெற்றோர் வற்புறுத்தியதால் தான் குஷ்புவை திருமணம் செய்ததாகவும், கேட்ட வரதட்சணையை குஷ்புவின் பெற்றோர் கொடுக்கவில்லை என்றும் கூறி தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குஷ்பு கணவனின் அனைத்து துன்புறுத்தல்களையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, குடிபோதையில் இருந்த கணவன் வழக்கம்போல் மனைவியை துன்புறுத்த ஆரம்பித்திருக்கிறார். மனைவி குஷ்புவை கண்மூடித்தனமாக தாக்கியவர், அவரை தரதரவென சமையலறைக்கு கால்களைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளார். அங்கு அவரது கை, கால்களை கட்டிப்போட்டு, சூடான கத்தியால் மார்பு, கைகள் மற்றும் கால்களில் கடுமையாக சூடு வைத்துள்ளார். இதனால் அலறித் துடித்திருக்கிறார் குஷ்பு. இருப்பினும் மனம் இரங்காத கணவன், கத்தியை கேஸ் அடுப்பில் கொதிக்க வைத்து, வாயில் சூடு வைத்து துன்புறுத்தியிருக்கிறார்.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்தபோது, வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இருந்துள்ளனர். ஆனால் யாரும், கொடுமைப்படுத்திய கணவனை தடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, படுகாயமடைந்த குஷ்பு மறுநாள் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வீட்டு வேலைக்காரரின் செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து பதறிப்போன குஷ்புவின் பெற்றோர், விரைந்து வந்து தங்களது மகளை காப்பாற்றியுள்ளனர்.
தங்களது மகள் மீதிருந்த தீக்காயங்களைக் கண்டு கண்கலங்கிய அவர்கள், குஷ்புவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். பின்னர் குஷ்புவின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குஷ்புவிடம் வாக்குமூலம் பெற்றனர். தங்களது மகளை மருமகன் கொடூரமாக துன்புறுத்தியிருப்பதாகவும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
August 27, 2025 3:40 PM IST