Last Updated:
கடந்த சில தினங்களாக தொடரும் கனமழையால் சூரல்மலை பகுதியில் இருந்து முண்டக்கை செல்லக்கூடிய பகுதியிலும் சில இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் வேறோடு சாய்ந்து உள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டு பாதித்த சூரல்மலை பகுதியில் உள்ள ஆற்றில் மழைநீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதியில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் தங்களது உறவினர்களை இழந்தும், உடமைகளை இழந்தும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது கேரளா மாநிலம் வயநாடு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதம் முதலே ஆரம்பித்த மழையின் தாக்கம் அவ்வப்போது கனமழையாகவும், மிதமான மழையாகவும் பெய்து வந்தது.
குறிப்பாக கடந்த ஆண்டு பேரிடர் ஏற்பட்ட முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சூரல்மலை பகுதியில் உள்ள ஆற்றில் மழைநீர் அதிகரிப்பு காணப்படும் நிலையில், தற்போது சூரல்மலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது கடந்த ஆண்டு பேரிடர் ஏற்பட்டபோது சூரல்மலை பகுதியில் இராணுவத்தினர் மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பெய்லி பாலம் பகுதியில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் உயரத்தை நெருங்கக்கூடிய அளவிற்கு வெள்ளநீர் அதிகரித்து வருகிறது.
அதேபோல சூரல்மலை பகுதியில் இருந்து முண்டக்கை செல்லக்கூடிய பகுதியிலும் சில இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும் தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏதேனும் மழை பாதிப்பு ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் சரிசெய்ய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
June 26, 2025 12:31 PM IST

