Last Updated:
சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி, அம்பதி ராயுடுவின் அபார ஆட்டத்தால் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.
முதன் முறையாக நடைபெற்ற இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் அடங்கிய உலகின் 6 நாடுகளின் அணிகள் பங்கேற்ற இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் முதல் சீசன் இந்தியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணியும், பிரைன் லாரா தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டுவைன் ஸ்மித் (Dwayne Smith) 45 ரன்களும், சிம்மன்ஸ் 57 ரன்களும் எடுத்தனர். பிரையன் லாரா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இந்திய மாஸ்டர் அணி சார்பில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அம்பதி ராயுடு தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஒரு சிக்சர் இரண்டு பவுண்டரிகளை விளாசிய சச்சின் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். எனினும், 50 பந்துகளில் 74 ரன்கள் குவித்த அம்பதி ராயுடு வெற்றிக்கு வித்திட்டார். யூசுப் பதான் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்த போதும், யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பின்னி ஜோடி வெற்றியை உறுதி செய்தது. 17 புள்ளி ஒரு ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய இந்திய மாஸ்டர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் கொண்டாடினர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 17, 2025 6:35 AM IST


