Last Updated:
அசாம் மாநிலம் கொக்ரஜ்ஹர் பகுதியில் சாலை விபத்தால் ஏற்பட்ட தகராறு, வன்முறையாக மாறியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
அசாம் மாநிலம், கொக்ரஜ்ஹர் பகுதியில் கடந்த திங்கள் கிழமையன்று சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கவுரிநகர்- மேஷிங் சாலையில் ஸ்கார்பியோ வாகனத்தில் சென்றனர்.
அவர்கள் தங்கள் பகுதியில் இருந்து கால்நடைகளை திருடிச் செல்வதாக எண்ணி உள்ளூர் மக்கள் அவர்களை துரத்தியதாக தெரிகிறது. இதில் அந்த வழியாக சென்ற இரு பழங்குடியினர் மீது அவர்களது வாகனம் மோதியது.
அங்கு வந்த உள்ளூர் மக்கள், ஸ்கார்பியோவில் இருந்தவர்களை தாக்கி வாகனத்திற்கு தீ வைத்தனர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் இளைஞர் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அங்கு நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் டயர்களை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் அங்கு வதந்திகள் பரவுவதை தடுக்க இணைய சேவை நிறுத்தப்பட்டது. மேலும், அதிரடி படையினர் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


