Last Updated:
வந்தே மாதரம் 150 ஆண்டு மக்களவையில் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அப்பாடலின் பல தகவல்களை வெளியிட்டு காங்கிரஸுக்கு நெருக்கடி ஏற்படுத்தப்போகிறார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆண்டுகள் நிறைவடைவது குறித்து திங்கள்கிழமை (டிசம்பர் 8) மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தின்போது வந்தே மாதரம் பாடலின் பல முக்கியமான மற்றும் அதிகம் அறியப்படாத உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
1870களில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய், சமஸ்கிருதத்தில் இயற்றிய இந்தப் பாடல், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்டோபர் 1 அன்று மத்திய அமைச்சரவை, நாடு முழுவதும் தேசியப் பாடலின் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதாக அறிவித்தது.
இந்தப் பாடல் அதன் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்தியாவின் தேசியப் பாடலின் 150 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் மக்களவையில் 10 மணி நேர சிறப்பு விவாதம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியும் வந்தே மாதரம் குறித்து சபையில் உரையாற்ற உள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக பேசியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பாடலின் முக்கிய சரணங்களை அதில் இருந்து எடுத்துவிட்டதாக காங்கிரஸ் பெயரை குறிப்பிடாமல் குற்றம் சாட்டியிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி முன்னர் பேசியதாவது: “1937 ஆம் ஆண்டில், ‘வந்தே மாதரம்’ பாடலின் முக்கியமான வசனங்கள் கைவிடப்பட்டன. ‘வந்தே மாதரம்’ உடைக்கப்பட்டு, துண்டு துண்டாக கிழிக்கப்பட்டது,” என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார்.
மொத்தம் ஆறு சரணங்களை கொண்டுள்ள வந்தே மாதரம் பாடலில், முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே இந்தியாவின் தேசிய பாடலாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அந்த இரண்டிலும், பக்தி மற்றும் மதப்பிரிவு அல்லாத பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நாளை (8ஆம் தேதி) வந்தே மாதரம் குறித்த விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தில் பேசவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, விடப்பட்ட நான்கு சரணங்கள் உள்ளிட்டவற்றை குறித்து பேசி காங்கிரஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்த போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என கடந்த ஐந்து தினங்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், அது குறித்தான விவாதம் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் தினமான 8ஆம் தேதி வந்தே மாதரம் பாடல் 150 ஆம் ஆண்டு விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் SIR பிரச்சினையிலிருந்து திசைதிருப்ப அரசு வந்தே மாதரம் விவாதத்தை பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
December 07, 2025 5:45 PM IST


