Last Updated:
தேங்காய் நார் கயிறுகள் பெரும்பாலும் பல்வேறு தொழில்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தேங்காய் நார் கயிறுகள் அதிக அளவில் தயார் செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் தொழில் ஒரு முக்கிய குடிசைத் தொழிலாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி, தோப்பூர், கலர் பட்டி, பாகல் பட்டி போன்ற பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கயிறு உற்பத்தி ஆலைகளும், 150-க்கும் மேற்பட்ட நார் மில்களும் இயங்கி வருகின்றன. மேலும், இந்த மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கயிறு மற்றும் நார் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தத் தொழில் பெரும்பாலும் குடிசைத் தொழிலாகவே நடைபெறுகிறது. இங்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கயிறு திரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேங்காய் நார் கயிறு பல்வேறு விதமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. நார் கயிறுகளை பயன்படுத்தி தூரிகைகள், மெத்தைகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. கட்டுமான பணிகளுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது. மேலும், இது விவசாயத்தில் மண்ணை ஈரப்பதமாக வைத்திருக்கவும், உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நல்ல இலாபம் தரும் தொழில் என்பதால் அதிகளவில் இப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
தேங்காய் நார் கயிறு உற்பத்தியாளர் கூறியதாவது; நாங்க சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் காலகாலமாக தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறோம். இப்பகுதி முழுக்க எங்களைப் போன்ற பெரும்பாலான குடும்பத்தினர் இந்தக் தேங்காய் நார் கயிறு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கயிறுகள் கட்டுமான பணிகளின் போது, கட்டிடங்களுக்கு சாரம் அமைக்கவும், கிணறுகளில் இருந்து தண்ணீர் இறைக்கவும், மற்றும் பல தொழில்களிலும் இது அதிக அளவில் பயன்படுகிறது.
இந்த அளவிற்கு பல்வேறு தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் இந்த தேங்காய் நார் கயிறுகள் தயாராவது எப்படி என்றால், முதலில் தேங்காய் மட்டையிலிருந்து நார் தனியாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்காக இப்பகுதி முழுக்க 150-க்கும் மேற்பட்ட நார் மில்களும் இயங்கி வருகின்றன. இங்கு தேங்காய் மட்டையிலிருந்து நார் தனியாக பிரித்து எடுத்து சுத்தம் செய்யப்படுகிறது. பிறகு தயிர் தயாரிக்க பதமான ஈரப்பதத்தில் கயிறு உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பிறகு நாங்கள் அதனை கயிறு தயாரிப்பதற்கு ஏற்றவாறு பதப்படுத்தி எடுத்துக் கொள்வோம். பிறகு இயந்திரங்களின் மூலம் நார் கயிறு தயாரிக்கப்படுகிறது. பிறகு தரம் பிரித்து ரூபாய் 30 முதல் 50 ரூபாய் வரையிலும் சந்தையில் விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் தயார் செய்யும் நார் கயிறுகள் மும்பை, குஜராத், கொல்கத்தா போன்ற வெளி மாநிலத்திற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது” என்றார்.
Salem,Salem,Tamil Nadu
July 13, 2025 5:28 PM IST
வட மாநிலங்களில் மாஸ் காட்டும் சேலம் தேங்காய் நார் கயிறு.. எப்படி தயாராகிறது தெரியுமா ?

