Last Updated:
வடகொரியாவின் வடக்கு கடற்கரை நகரமான சின்போ அருகில் இருந்து மாதிரி அணு ஆயுதம் பொருத்தப்பட்ட இந்த ஏவுகணை ஏவப்பட்டிருக்கிறது.
மாதிரி அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்திருப்பது ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் வடகொரியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அவ்வப்போது ஆயுத சோதனைகள் மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சனிக்கிழமையன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிக உந்துவிசை கொண்ட ஹுவாசாங்-20 ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
அந்த ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் அதன் அருகே அதிபர் கிம் ஜாங் உன்னும், அவரது மகளும் இருக்கும் புகைப்படமும் வெளியாகியிருக்கிறது. வடகொரியாவின் வடக்கு கடற்கரை நகரமான சின்போ அருகில் இருந்து மாதிரி அணு ஆயுதம் பொருத்தப்பட்ட இந்த ஏவுகணை ஏவப்பட்டிருக்கிறது. இது இந்த ஆண்டின் 7ஆவதும், ஏப்ரல் மாதத்தில் மட்டும் நான்காவது சோதனையும் ஆகும். இந்த சோதனையை ஏராளமானோர் பார்வையிட்டனர்
இந்த சோதனையால் ஜப்பானும், தென் கொரியாவும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. தென் கொரிய அரசு அவசர ஆலோசனை மேற்கொண்டது. ஜப்பானும் கவலை தெரிவித்துள்ளது. வெகுவிரைவில் அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்-கும் சந்திக்கவுள்ள நிலையில் இந்த சோதனையை வடகொரியா மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


