முல்லைத்தீவு – வட்டுவாகால் விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், இந்தச் செம்மணியை விடவும் பல மடங்கு பெரியதொரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
“செம்மணி மனிதப் புதைகுழியில் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தின்
சாட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில், இதற்குச் சர்வதேச நாடுகளும் இலங்கை
அரசும் என்ன பதிலைக் கூறப்போகின்றன துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய
புதைகுழிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்
மேற்கண்டவாறு கூறினார்.
தமிழ் இனத்தின் மீதான திட்டமிட்ட அழிவு
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“எங்களுடைய தமிழ் இனத்தின் மீதான திட்டமிட்ட அழிவுகளை இலங்கை அரசினுடைய
ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாகச் செய்துகொண்டே வந்திருக்கின்றார்கள்.

ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் எமது இனத்தை வன்முறையாக அழித்தமைக்கான அசைக்க
முடியாத சாட்சிகள், இயற்கையின் நீதியால் தற்போது ஒவ்வொன்றாக வெளியே
வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
செம்மணியில் தற்போதைய அகழ்வுகளின் மூலம் வெளிவரும் உண்மைகள் உலகத்தையே
உலுக்கியுள்ளன.
தமிழர் தாயகப் பகுதிகளில் இன்னும் எத்தனையோ இடங்களில் இவ்வாறான
மனிதப் புதைகுழிகள் இரகசியமாக மூடிமறைக்கப்பட்டுள்ளன.
அவற்றை முறையாகத்
தோண்டத் தொடங்கினால், இன்னும் பேரதிர்ச்சியைத் தரும் வகையிலான மனித என்புக்
குவியல்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
குறிப்பாக, முல்லைத்தீவு வட்டுவாகால் பகுதியில் அமைந்துள்ள விகாரைக்குக் கீழே
அகழ்வுகளை மேற்கொண்டால், செம்மணியை விட மிகப்பெரியதொரு மனிதப் புதைகுழி
வெளிச்சத்துக்கு வரும். இதற்காக அந்த விகாரையை உடைத்துத்தான் அகழ்வுப் பணிகளை
முன்னெடுக்க வேண்டும் என்பதில்லை.
பாரிய மனிதப் புதைகுழிகள்
தற்கால நவீன தொழில்நுட்பக் கருவிகளைப்
பயன்படுத்தி, ‘ஸ்கேன்’ செய்வதன் மூலமே அங்கு நிலத்தடியில் எத்தனை
ஆயிரக்கணக்கான என்புத் தொகுதிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக
ஆராய்ந்து அறிய முடியும்.
இதேபோல், கேப்பாப்பிலவு போன்ற இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த மற்றும்
இருக்கின்ற பல இடங்களில் பாரிய மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என அப்பகுதி
மக்கள் இன்றும் பலத்த அச்சத்துடன் இருக்கின்றார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான இடங்களில் அப்பாவிப்
பொதுமக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, கூட்டங்கூட்டமாகப்
புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சந்தேகத்துக்குரிய அந்த மனிதப் புதைகுழிகள்
அனைத்தும் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் முழுமையாகத் தோண்டப்பட்டு விசாரணைகள்
நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் நேரடியாகத் தலையிட்டு,
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பாரபட்சமற்ற நீதியைப் பெற்றுத்தர வேண்டும்
என்பதே எங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

