
கனகராஜா சரவணன்
மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடாவில், வீதியின் குறுக்கே அமைக்கப்பட்ட வடிகாலுக்குள் சிக்கிய நபரொருவர், தீயணைப்புப் படையினரால் இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் சனிக்கிழமை (13) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நாவற்குடா காத்தாடும் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும் வடிகாலுக்குள், நபரொருவர் மாலை 5.30 மணியளவில் இறங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததைக் கண்ட பொதுமக்கள், இது குறித்துப் பொலிஸாருக்கும் தீயணைப்புப் பிரிவினருக்கும் அறிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்புப் படையினரும் காத்தான்குடி பொலிஸாரும், வடிகாலுக்குள் சிக்கியவரை மீட்கும் பணிகளை முன்னெடுத்தனர். அங்கு கூடியிருந்த மக்களால் பெரும் பரபரப்பு நிலவிய சூழலில், தீயணைப்புப் படையினர் சுமார் இரண்டு மணிநேரப் போராட்டத்திற்கு மத்தியில் இரவு 7.30 மணியளவில் குறித்த நபரைப் பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் சிறையிலிருந்து அண்மையில் விடுதலையானவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

