
ஹஸ்பர்
டித்வா சூறாவளியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு செயலிழந்திருந்த வடக்கு ரயில் பாதை, துரித கதியில் புனரமைக்கப்பட்டு வியாழன் 09 முதல் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் வடக்கு ரயில் பாதையின் 14 இடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகின. இதனைச் சீரமைக்க இந்திய அரசு வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் மொத்த நிதி உதவியின் கீழ், அவசரத் தேவையாக 5 மில்லியன் அமெரிக்க டொலர் (USD 5 Million) ஒதுக்கப்பட்டு இந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இந்திய ‘இர்கான்‘ (IRCON) நிறுவனத்தின் நிபுணத்துவத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தில், சேதமடைந்த பாலங்கள் மற்றும் தண்டவாளங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் மீளமைக்கப்பட்டுள்ளன.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாகவே இந்தப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதால், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கியும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கியுமான போக்குவரத்துச் சேவையில் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் நீங்கியுள்ளன.
இதற்கமையஈ யாழ் தேவி (Yal Devi): வழக்கம் போல் தனது தினசரி சேவையை ஆரம்பிக்கவுள்ளதுடன், நகரிடை கடுகதி ரயில் (Intercity Express): மவுண்ட் லாவினியாவிலிருந்து காலை 5:15 மணிக்குப் புறப்பட்டு யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை (KKS) சென்றடையும். மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து மதியம் 1:50 மணிக்குப் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

