கோலாலம்பூர்:
வடகிழக்கு பருவமழை தாக்கம் காரணமாக ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் வெள்ளநீர் அதிகரிக்கும் அபாயம் நிலவினாலும், அதனை சமாளிக்க போதுமான மனிதவளம் மற்றும் உபகரணங்கள் இருப்பதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு இயக்குநர் நோர்சின் பௌஸி, தற்போதைய 12 மணி நேரப் பணிச்சுழற்சியை தேவையானால் 24 மணி நேரமாக நீட்டிக்க துறை முழுமையாகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெற தேவையான ஆட்கள், சாதனங்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக உள்ளன என்றும் அவர் கூறினார்.
தற்போது வெள்ளத்தின் முதல் அலை தொடக்க நிலையில் உள்ளதாகவும், இரண்டாவது அலை டிசம்பர் இரண்டாவது வாரத்தில் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் நோர்சின் பௌஸி தெரிவித்தார்.
மாநிலங்களுக்கிடையேயான அனைத்து முகவர் அமைப்புகளும் பரஸ்பரம் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய, மீட்புப்பணிகள் மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பேரிடர் நடவடிக்கைக் கட்டுப்பாட்டு மையம் (Disaster Operations Control Center) மூலம் ஒருங்கிணைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




