Last Updated:
நாடு முழுவதும் தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு, பொதுத்துறை வங்கிகள் அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக தேசிய வங்கிகளின் அலுவலர் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இன்று முதல் 30ஆம் தேதி வரை 3 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர் சங்கங்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. அதில் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவிப்பது தொடர்பாக உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்றும் வங்கி ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டதால் வழக்கத்தை விட கூடுதலான வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று சேவையைப் பெற்றனர்.


