Last Updated:
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்க, இந்தியா சார்பாக ஓம் பிர்லா மற்றும் விக்ரம் மிஸ்ரி விழாவில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்கவுள்ள நிலையில் இந்தியா சார்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர்களின் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்து, முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி 209 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து இடைக்கால அரசை தலைமையேற்று நடத்திய முகமது யூனிஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான், துருக்கி, இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் இந்தியா சார்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


