
Last Updated:
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது இஸ்லாமியர்கள் விட்டுச் சென்ற சொத்துகளை கைப்பற்றவே இந்த சட்டத் திருத்த நடவடிக்கை.
வக்பு வாரிய திருத்த மசோதாவில் 572 திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொடக்க நிலையிலேயே மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாஜக எம்பி ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு மசோதா குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதா அறிக்கையை தயார் செய்யும் பணி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வக்பு வாரியத்தில் மாவட்ட நீதிபதிகளுடன், அரசு அதிகாரிகளையும் சேர்க்கவும், கூடுதலாக 2 முதல் மூன்று உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் அளித்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட 10 எம்பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். டெல்லி தேர்தலுக்கு முன்பாக வக்பு மசோதாவை பாஜக பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாக ஆ.ராசா தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி ஆ. ராசா, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது இஸ்லாமியர்கள் விட்டுச் சென்ற சொத்துகளை கைப்பற்றவே இந்த சட்டத் திருத்த நடவடிக்கையை பாஜக எடுப்பதாக தெரிவித்தார்.
January 27, 2025 6:46 PM IST

