பட மூலாதாரம், AFP
லைபீரியா – நார்வே ஒப்பந்தம் மீதமிருக்கும் காடுகளைப் பாதுகாக்கும் என நம்பிக்கை எழுந்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் 2020ஆம் ஆண்டிற்குள் மரங்கள் வெட்டப்படுவதை முழுமையாகத் தடுப்பதற்காக அந்நாட்டிற்கு 150 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்ய நார்வே முன்வந்துள்ளது.
தற்போது நியூ யார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. பருவநிலை உச்சிமாநாட்டில், நார்வே நாட்டு அதிகாரிகள் இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்களை பிபிசியிடம் தெரிவித்தனர்.
ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளில் இருக்கும் அளவு பெரிய அளவிலான காடுகள் லைபீரியாவில் இல்லை. இருந்தாலும் மேற்கு ஆப்பிரிக்காவில் மிச்சமிருக்கும் மழைக் காடுகளில் குறிப்பிடத்தக்க அளவு இந்நாட்டில் இருக்கிறது.
உலக அளவில் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் இந்தக் காடுகள் இருக்கின்றன. அழிவை நெருங்கிக் கொண்டிருக்கும் சிம்பன்சி, காட்டு யானை, சிறுத்தைகள் போன்றவை இங்கு வசிக்கின்றன.
இந்நாட்டில் நடந்துவந்த உள்நாட்டுப் போர் 2003ஆம் ஆண்டில் முடிந்ததற்குப் பின்னால், சட்டவிரோதமாக மரம் வெட்டுவது பெருமளவில் அதிகரித்துள்ளது.
காடுகளை வெட்டுவதற்கு உரிமம்
2012ஆம் ஆண்டில் அந்நாட்டின் அதிபர் எலென் சர்லீஃப் ஜான்சன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அந்நாட்டில் எஞ்சியிருக்கும் முதல் நிலை மழைக் காடுகளில் 50 சதவீதத்தை வெட்டிக்கொள்ள பல நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன. சர்வதேச அளவில் கண்டனம் எழுந்ததையடுத்து பல உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டன.
இப்படி காடுகளை பெருமளவில் அழித்ததன் மூலம் இயல்பாக வைரஸ்கள் இருக்கும் இடங்களை மக்கள் நெருங்கும் நிலை உருவானதற்கும் எபோலா நோய் பரவியதற்கும்கூட தொடர்பிருக்கிறது என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இப்போது செய்யப்பட்டிருக்கும் ஒப்பந்தம் இந்தக் காடுகளைப் பாதுகாக்கும் என நார்வேவும் லைபீரியாவும் நம்புகின்றன.
இந்த ஒப்பந்தத்தின்படி, காடுகளைக் கண்காணிக்கவும் காவல்காக்கவும் தேவையான அமைப்பை ஏற்படுத்த நார்வே லைபீரியாவுக்கு உதவும்.
தற்போது மரம் வெட்டுவதற்கு அளிக்கப்பட்டிருக்கும் உரிமங்கள் அனைத்தும் சுயேச்சையான அமைப்பு ஒன்றின் மூலம் பரிசீலிக்கப்படும். அதுவரை லைபீரியா புதிதாக மரம் வெட்டுவதற்கு யாருக்கும் உரிமம் அளிக்காது.
2020ஆம் ஆண்டிற்குள் தன்வசமிருக்கும் காடுகளில் 30 சதவீதத்தையோ அதற்கு மேலாகவோ காப்புக் காடுகளாக வகைப்படுத்த லைபீரியா ஒப்புக்கொண்டிருக்கிறது. காடுகளைப் பாதுகாக்கும் சமூகத்தினருக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டமும் துவக்கப்படும்.
லைபீரியாவில் இருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.
நிதி நெருக்கடி ஏற்படும்போது, அதைச் சமாளிக்கும் விதமாகவே மரங்களை வெட்டும் தொழிலை நோக்கி லைபீரியா திரும்பியதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது எபோலா நோய் பரவி, பெரும் நிதி நெருக்கடியை உருவாக்கியிருக்கும் நிலையில், இந்த நார்வே ஒப்பந்தம் மேலும் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.