பாகிஸ்தானின் லெஜண்டரி வேகப்பந்து வீச்சாளர் மட்டுமல்லாமல் உலக பேட்டர்களால் வானளாவ புகழப்படும், இப்போது மட்டுமல்ல என்றுமே இளம் இடது கை வேகப் பந்து வீச்சாளர்களின் ரோல் மாடலாய்த் திகழ்ந்து வரும் வாசிம் அக்ரம் தன் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததை அடுத்து அவரை நோக்கி ஷட் – அப் என்பது போல் ஷாஹின் அஃப்ரீடி செய்கை செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ( பிஎஸ்எல் ) 2024, மார்ச் 14 முதல் பிளேஆஃப்கள் தொடங்க உள்ளதால், தொடர் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகளில் ஆறு அணிகள் தகுதி பெற்றுள்ளன, ஆனால் லீக் கட்டத்தில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் நாக்-அவுட் போட்டிகளில் மோதும் அணிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
பாகிஸ்தான் சூப்பர் லீகில் லாகூர் குவாலாண்டர்ஸ் அணியின் கேப்டனாக ஆடி வருகிறார் ஷாஹின் ஷா அஃப்ரீடி. அவரது தலைமைத்துவத்தை வாசிம் அக்ரம் கேள்விக்குட்படுத்தினார். அதாவது கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி வீரர்கள் சிகந்தர் ரசா, தென் ஆப்பிரிக்காவின் டேவிட் வீஸே ஆகியோர் இருக்கும் போது ஷாஹின் அஃப்ரீடி இவர்களைப் பின்னுக்குத் தள்ளி தான் முன்னால் இறங்கினார். ஆனால் 3 பந்துகளில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத்தான் வாசிம் அக்ரம் விமர்சித்தார்.
“ஷாஹின் 3 பந்துகளில் 1 ரன் எடுத்தார், ரசா 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார், வீஸே 9 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். ஸ்கோர் 177 ரன்களுக்கு வந்தது. கேப்டனாக இருக்கிறோம் என்பதாலேயே தேவையில்லாமல் முன்னால் இறங்கக் கூடாது, ஷாஹின் அஃப்ரீடி முன்னால் இறங்கி என்ன சாதித்தார்? இவரை விடவும் சிறந்த ஹிட்டர்கள் இருந்தால் அவர்களையல்லவா ஒரு கேப்டனாக அவர் இறக்கியிருக்க வேண்டும்? இவர் இறங்காமல் இருந்திருந்தால் ஸ்கோர் 190 ரன்களாகியிருக்கும். ஷாஹின் அஃப்ரீடி இன்னும் ஆல் ரவுண்டர் ஆகவில்லை” என்று விமர்சனம் செய்தார் வாசிம் அக்ரம்.
ஆனால் வாசிம் அக்ரம் சொன்னதன் நேரம்… அடுத்த போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிராக ஷாஹின் அஃப்ரீடி மீண்டும் அதே டவுனில் இறங்கி 34 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார், இதில் 2 சிக்சர்களை விளாசி அரைசதம் எடுத்தார். அரைசதம் எடுத்தவுடன் வாசிம் அக்ரமுக்கு பதிலடி கொடுப்பது போல் தன் உதட்டின் மேல் ஆட்காட்டி விரலை வைத்து ‘ஷட் அப்’ என்பது போல் சைகை செய்தார், இது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. கடைசியில் ஷாஹின் அஃப்ரீடியின் அரைசதமும் வீணானது, ஏனெனில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 167 ரன்கள் இலக்கை த்ரில் போட்டியில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இன்னொரு நகை முரண் என்னவெனில் கடைசி ஓவரை அஃப்ரீடிதான் வீசினார். குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் முகமது வாசிம் ஜூனியர் அஃப்ரீடியின் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி வெற்றி பெறச் செய்தார். பேட்டிங்கில் கவனம் செலுத்தி அஃப்ரீடி பந்து வீச்சில் கோட்டை விட்டார் என்று ரசிகர்கள் அவரைச் சாடி வருகின்றனர், இதோடு வாசிம் அக்ரமை இன்சல்ட் செய்யலாமா என்றும் ஷாஹின் மீது ரசிகர்கள் பாய்ந்து வருகின்றனர்.