Last Updated:
ரோகித் அல்லது விராட் கோலி கேப்டனாக இருந்தபோது நீங்கள் அவரைப் பார்த்தாலே அவர் தான் கேப்டன் என்று அறிந்து கொள்ளலாம்
லீட்ஸ் டெஸ்டில் இந்திய அணிக்கு 3 கேப்டன்கள் வரை செயல்பட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் பிரபல விமர்சகருமான நாசர் உசேன் கூறியுள்ளார்.
முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து கேப்டன் சுப்மன் கில்லும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
371 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் போட்டியிலேயே அவரது தலைமையிலான அணி தோல்வியடைந்திருக்கிறது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் விமர்சகருமான நாசர் உசேன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் இருந்த ஆளுமை தன்மை கில்லிடம் நான் பார்க்கவில்லை. அவர் ஒவ்வொரு பந்துகளுக்கும் ரியாக்ஷன் தான் செய்கிறார். முன்கூட்டியே அவர் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று கருதுகிறேன்.
ரோகித் அல்லது விராட் கோலி கேப்டனாக இருந்தபோது நீங்கள் அவரைப் பார்த்தாலே அவர் தான் கேப்டன் என்று அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் ஆட்டத்தின் கட்டுப்பாடு அவர்களிடம் தான் இருக்கும்.
ஆனால் இந்தியா விளையாடிய போது நான் இரண்டு மூன்று கேப்டன்களை பார்த்தேன். ஒரு கமிட்டி மூலம் இந்த கேப்டன்ஷிப் நடத்தப்படுகிறது. இந்திய அணி தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் கேட்சுகளை விட்டார்கள் மற்றும் பேட்டிங் வரிசை திடீரென சரிந்தது. இதனை சுப்மன் கில்லால் சரி செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
June 25, 2025 6:02 PM IST


