Last Updated:
உத்தர பிரதேச நொய்டாவில், தென்கொரியாவின் டக் ஹீயூவை அவரது காதலி லுஞ்சீனா பமாய் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேசத்தில் தென்கொரியாவை சேர்ந்தவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்கொரியா நாட்டைச் சேர்ந்தவர் டக் ஹீயூ. 47 வயதான இவர் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவியில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் லுஞ்சீனா பமாய் என்பவருடன் ஒன்றாக வசித்து வந்தார். இருவரும் திருமணம் ஆகாமலேயே கணவன் – மனைவி போன்று ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வீட்டிலேயே ஒன்றாக அமர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர். மது போதை தலைக்கேறிய நிலையில், டக் ஹீயூ தனது காதலியுடன் வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். பொறுத்து பொறுத்து பார்த்த லுஞ்சீனா, ஆத்திரத்தில் அருகில் இருந்த கத்தியை எடுத்து காதலனின் மார்பில் குத்தியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்ததும் இளம்பெண் செய்வது அறியாமல் திகைத்துள்ளார். பின்னர், உயிருக்கு போராடிய காதலனை அருகில் உள்ள GIMS மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ‘தி நாலெட்ஜ் பார்க்’ காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின்பேரில் டக் ஹீயூ-வின் காதலியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த சில நாட்களாகவே தனது காதலன் மதுபோதையில் அடித்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார். சம்பவத்து அன்றும் போதை தலைக்கேறிய நிலையில் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். அப்போது, ஆத்திரத்தில் கத்தியால் ஓங்கி குத்தியதில் மார்பில் ஆழமாக பட்டுள்ளது.
கொலை செய்யும் நோக்கில் கத்தியால் குத்தவில்லை என்றும், ஆத்திரத்தில் செய்த தவறு கொலையில் முடிந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து மணிப்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மது போதையில் ஏற்பட்ட தகராறில் தான் டக் ஹீயூ கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் தென்கொரியாவைச் சேர்ந்தவர் என்பதால், அவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் கணவன் – மனைவி போன்று வாழ்ந்து வந்தவர்களிடம் ஏற்பட்ட மோதலில், தென்கொரியாவைச் சேர்ந்தவரை அவரின் காதலிலேயே மார்பில் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


