முறைப்படி திருமணம் செய்யாமலேயே கணவன் – மனைவி போன்று வாழும் ‘லிவிங் டுகெதர்’ உறவின் வில்லங்கத்தால் பெரும் கனவுடன் இருந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை செல்போனில் டெலீட் செய்ய மறுத்ததால், முன்னாள் காதலனுடன் சேர்ந்து கொலைபாதக செயலை அரங்கேற்றியது 3 வாரங்களுக்குப் பின் அம்பலமாகியுள்ளது. தடய அறிவியல் மாணவி போட்ட மாஸ்டர் பிளான், போலீசாரின் கழுகுப் பார்வையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது… தலைநகரை அதிர வைத்த சம்பவத்தில் நடந்தது என்ன?
32 வயதான ராம்கேஷ் மீனா என்பவர், டெல்லியில் உள்ள காந்தி விஹாரில் உள்ள குடியிருப்பில் தங்கி யுபிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்துள்ளார். திடீரென கடந்த 6 ஆம் தேதி அவர் தங்கியிருந்த வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே தீயணைப்புத் துறையினருடன் போலீசார் விரைந்து சென்றுள்ளனர். நீண்ட போராட்டத்துக்குப் பின் தீயை அணைந்த வீரர்கள், கருகிய நிலையில் ராம்கேஷின் உடலை கைப்பற்றினர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அக்டோபர் 5 ஆம் தேதி இரவு முகமூடி அணிந்த இரண்டு ஆண்கள் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. பின்னர், அதிகாலை 3 மணியளவில், தீ விபத்து ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பெண் ஒருவர் வெளியேறியதும் கண்டுபிடிக்கப்பட்டடது.
அவர், உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த, 21 வயதான அம்ரிதா என்பதும் அம்பலமானது. பின்னர், அவரை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தடய அறிவியல் மாணவியான அம்ரிதா, திருமணம் செய்யாமலேயே ராம்கேஷ் உடன் லிவிங் டுகெதரில் இருந்துள்ளார். அப்போது, அம்ரிதாவின் ஆபாச வீடியோக்களை ராம்கேஷ் ரகசியமாக பதிவு செய்துள்ளார். அதை அறிந்த இளம் பெண் வீடியோக்களை டெலீட் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், அதை அவர் டெலீட் செய்ய மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வேறு வழி தெரியாமல் லிவிங் பார்ட்னரை தீர்த்துக்கட்ட இளம் பெண் கடந்த சில நாட்களாக திட்டமிட்டுள்ளார். அதற்காக, சொந்த ஊரில் உள்ள தனது முன்னாள் காதலன் உட்பட இரு ஆண்களின் உதவியை நாடியுள்ளார். தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
அதில், முன்னாள் காதலன் கேஸ் ஏஜென்சியில் வேலை செய்ததால் அங்கிருந்து சிலிண்டரை எடுத்து வந்து விபத்து போன்று ஜோடிக்க ஐடியா கொடுத்துள்ளார். அம்ரிதாவும் தடய அறிவியல் மாணவி என்பதால், தனது கல்வி அறிவை பயன்படுத்தி மாஸ்டர் பிளான் போட்டுள்ளார். அதன்படி சம்பவத்து அன்று மூன்று பேரும் ராம்கேஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரை கொடூரமாக தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக அம்ரிதா வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர், உடலில் எண்ணெய், நெய் மற்றும் மதுபானத்தை ஊற்றியுள்ளனர். தொடர்ந்து சிலிண்டர் வால்வை திறந்துவிட்டு தீ விபத்து ஏற்பட்டது போன்று கொலைபாதக செயலை அரங்கேற்றியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த ஹார்ட் டிஸ்க், லேப்டாப் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை எடுத்துச் சென்றது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தடய அறிவியல் மாணவி என்பதால் தடயமே இன்றி லிவிங் பார்ட்னரை கொலை செய்து விட்டு விபத்து நாடகம் போடலாம் என நினைத்துள்ளார்.
இளம் பெண் தனது கல்வி அறிவு மூலம் உண்மையை மூடி மறைக்க முயன்றதை, பல வழக்குகளை பார்த்த போலீசார், தங்களது அனுபவத்தின் மூலம் முறியடித்துள்ளனர். ராம்கேஷின் உடல் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவங்களில் வழக்கத்திற்கு மாறாக பெரும்பகுதி எரிந்து உருக்குலைந்துள்ளது. குறிப்பாக, எலும்புகளே உருகும் அளவிற்கு உடலில் தீ நின்று எரிந்துள்ளது. அறையில் உள்ள ஏ.சி. வெடித்து விபத்து ஏற்பட்டதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படாமல் இருந்துள்ளது.
மேலும், சம்பவத்திற்குப் பிறகு அமிர்தாவின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தேகத்தால் இது விபத்து இல்லை… திட்டமிட்ட கொலை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அதன் அடிப்படையில் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்ரிதா மற்றும் அவரின் முன்னாள் காதலன் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அண்மையில், பெங்களூருவில் தனது மனைவியை, மருத்துவரான கணவரே அதிக மயக்க ஊசி செலத்தி கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இவர் தனது மருத்துவ அறிவை பயன்படுத்தி மனைவியை கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் என நாடகமாடியது, தடய அறிவியல் சோதனை மூலம் அம்பலமானது. இந்த சூழலில் தடய அறிவியல் மாணவி, தான் கற்ற அனுபவத்தின் மூலம் லிவிங் பார்ட்னரை தடயமே இன்றி கொலை செய்து விட்டு, விபத்து நாடகமாடியவர் முன்னாள் காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் பேரதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
October 27, 2025 8:40 PM IST
‘லிவிங் டுகெதர்’ உறவு.. செல்போனில் அந்தரங்க வீடியோக்கள்.. 3 வாரங்களுக்குப் பின் அம்பலமான பகீர் சம்பவம்!

