Last Updated:
வியான் முல்டர் பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தும், அணியின் நலனுக்காக டிக்ளர் செய்தார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசி மிரட்டிய தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர், பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தும் அதனை தவிர்த்துவிட்டார்.
தென்னாப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் இடையேயான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோ நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 626 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் வியான் முல்டர் 334 பந்துகளில் 367 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்த மேற்கு இந்திய தீவுகள் வீரர் பிரையன் லாராவின் 21 ஆண்டுகால சாதனையை வியான் முல்டர் முறியடிக்கும் வாய்ப்பு இருந்த போதும், தென்னாப்பிரிக்க அணி டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்துப் பேசிய வியான் முல்டர், அணியின் நலன் கருதியே டிக்ளேர் செய்ததாகக் கூறினார். பிரையன் லாரா ஒரு ஜாம்பவான் என்றும் அவர் இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்கள் குவித்த சிறப்பு வாய்ந்த சாதனை அவரிடமே இருக்கட்டும் என்பதால் தான் 400 ரன்களுக்கு மேல் அடிக்க விரும்பவில்லை என்றும் கூறினார். மீண்டும் ஒரு முறை இதேபோன்று வாய்ப்பு கிடைத்தாலும் 400 ரன்களுக்கு மேல் அடிக்க மாட்டேன் என்றும் வியான் முல்டர் தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
July 08, 2025 10:11 AM IST