இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிகர லாபத்தை விட பன்மடங்கு அதிகமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்திருப்பது தெரியவந்துள்ளது.
தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அது தொடர்பான விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் FUTURE GAMING AND HOTEL SERVICES நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.368 கோடி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபமே ரூ.215 கோடி தான். இதன் மூலம், 3 ஆண்டுகளின் நிகர லாபத்தை விட சுமார் 6 மடங்கு அதிக அளவிலான பணத்தை FUTURE GAMING AND HOTEL SERVICES நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது.
இதே போன்று, 3 ஆண்டுகளில் ரூ.110 கோடி நிகர லாபம் ஈட்டிய க்விக் சப்ளை செயின் நிறுவனம், அதை விட 4 மடங்கு அதிகமாக, அதாவது ரூ.410 கோடி அளவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.50 கோடிக்கு மேல் நன்கொடை வழங்கிய பல்வேறு நிறுவனங்கள், 3 ஆண்டு நிகர லாபங்களில் பெரும் அளவிலான சதவிகிதத்தை அரசியல் கட்சிகளுக்கு அளித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. அதன் படி, IFB அக்ரோ நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.175 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதில், 53 சதவிகிதத்தை, அதாவது ரூ.92 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கி உள்ளது.
இதே போன்று, கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,013 கோடி நிகர லாபம் ஈட்டிய ஹால்தியா எனர்ஜி லிமிடெட், அதில் 37 சதவிகிதமான ரூ.377 கோடி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. தாரிவால் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் ஈட்டிய நிகர லாபமான ரூ.476 கோடியில், ரூ.115 கோடியை தேர்தல் பத்திரங்களுக்கு செலவிட்டுள்ளது. அதாவது நிகர லாபத்தில் 24 சதவகித்தை தாரிவால் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பரிச்சயமான தி ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனமும் தனது 3 ஆண்டு நிகர லாபத்தில் பெரும் பங்கை நன்கொடையாக வழங்கியுள்ளது.
3 ஆண்டுகளில் ரூ2,599 கோடி நிகர லாபம் ஈட்டிய தி ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், தேர்தல் பத்திரத் திட்டங்கள் மூலம் ரூ.54 கோடியை தேர்தல் பத்திரங்களுக்கு செலவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வேதாந்தா குழுமமும் 3 ஆண்டுகளில் ஈட்டிய நிகர லாபமான ரூ.48,372 கோடியில், ரூ.401 கோடியை நன்கொடையாக கொடுத்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறும் ஏர்டெல் நிறுவனம் ரூ.198 கோடியை அரசியல் கட்சிகளுக்கு வாரி வழங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…