Last Updated:
India-Pakistan War | அட்டாரி எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த லாகூரில்தான் சீனாவின் தொழில்நுட்பத்தில் உருவான HQ-9 என்ற வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. 150 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வரும் எந்த வான்வழித் தாக்குதலையும் கண்காணித்து அதனை முறியடிக்கும் திறன் உள்ள ராடார் இது.
பாகிஸ்தானின் லாகூருக்குள் புகுந்து ராடார் கட்டமைப்பை இந்தியா வெற்றிகரமாக தகர்த்துள்ளது. இது சாத்தியமானது எப்படி?.
பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை மட்டும் தாக்கி அழித்திருந்த இந்தியப் படைகள் முதல்முறையாக ராடார் கண்காணிப்பை தகர்த்தன. அட்டாரி எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த லாகூரில்தான் சீனாவின் தொழில்நுட்பத்தில் உருவான HQ-9 என்ற வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. 150 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வரும் எந்த வான்வழித் தாக்குதலையும் கண்காணித்து அதனை முறியடிக்கும் திறன் உள்ள ராடார் இது.
இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இந்தியா ஏவுகணையையோ, ட்ரோனையோ பாகிஸ்தானை நோக்கி செலுத்தினால் அதனை துல்லியமாக கண்காணித்து அழிக்கும் வல்லமை இந்த ராடாருக்கு உண்டு. ஆனால் அதையும் தாக்கும் கொம்பனாக இந்தியாவிடம் ஹார்பி ட்ரோன் (Harpy drone) இருந்ததை பாகிஸ்தான் மறந்திருக்கலாம்.
மணிக்கு 370 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து அடிக்கும் இந்த ஹார்பி ட்ரோன் தற்கொலை ட்ரோன் என அழைக்கப்படுகிறது. அதாவது வெடிபொருட்களுடன் பறந்து சென்று தாக்குதல் நடத்தி சிதறிப்போகக் கூடியவை இவை. இஸ்ரேலிடம் இருந்து வாங்கிய இந்த ஹார்பி ட்ரோன்களை அடுத்தடுத்து லாகூரை நோக்கி இந்தியா ஏவி விட பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல் தடுப்பு ராடார்கள் நிலைகுலைந்து போயின.
இனி இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தினால் அதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவை சேதமடைந்துள்ளன. ராவல்பிண்டி மற்றும் கராச்சி நகரங்களிலும் இதுபோன்ற தாக்குதலை இந்தியா அதிரடியாக நடத்தியதால் பாகிஸ்தான் திணறிப்போனது. இந்தியா அத்துமீறியதாக பாகிஸ்தான் அபாண்டமாக பழி சுமத்திய நிலையில், இது பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு பதிலடி என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெளிவாக கூறியது.
புதன்கிழமை இரவு முதல் ஸ்ரீநகர், சண்டிகர், பதான்கோட், ஜம்மு என காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத்தை ஒட்டிய 15 நகரங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன்கள் மூலமும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்த முயன்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனை வான்வெளித் தாக்குதல் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வெற்றிகரமாக இடைமறித்து தாக்கி அழித்ததாகவும், சேதமடைந்த பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் இந்தியப் பகுதிகளில் விழுந்ததே அதற்கு சாட்சி என்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆதாரங்களுடன் கூற பாகிஸ்தான் விழி பிதுங்கி நின்றது. லாகூரில் ராடார் அமைப்பு செயலிழந்து போன கையறு நிலையில் பாகிஸ்தான் தவித்து வருகிறது.
Delhi,Delhi,Delhi
லாகூரில் புகுந்து சொல்லி அடித்த ‘கில்லி’ – பாக். ராடார் கட்டமைப்பை தகர்த்த “ஹார்பி ட்ரோன்”.. எப்படி?


